கிரிக்கெட்

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்?: சூசகமாக தெரிவித்த ஜெய் ஷா

Published On 2024-05-10 10:02 GMT   |   Update On 2024-05-10 10:02 GMT
  • கடந்த வருடம் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ராகுல் டிராவிட் விரும்பினால் விண்ணப்பிக்கலாம்- ஜெய் ஷா

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் ராகுல் டிராவிட். இந்தியாவில் கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரோடு அவருடைய தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இங்கிலாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை தோல்வியடையாமல் முன்னேறியது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த வருடம் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என பிசிசிஐ தெரிவித்தது.

இந்த நிலையில் ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவில் ராகுல் நீடிப்பாரா? என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில் "ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதம் வரை மட்டுமோ. தன்னிச்சையாக அவரது பதவிக்காலம் நீடிக்கப்படமாட்டாது. அவர் விரும்பினால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படும். புதிய பயிற்சியாளர் இந்தியாவைச் சேர்ந்தவரா? வெளிநாட்டைச் சேர்ந்தவரா? என்பது தீர்மானிக்க முடியாது. அதுகுறித்து சிஏசி முடிவு செய்யும். பிசிசிஐ உலகளாவிய அமைப்பாகும்" என் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், தனது மற்றும் தனது சப்போர்ட் ஸ்டாஃப் ஆகியோரின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பாக ஒப்பந்தத்தில் ராகுல் டிராவிட் கையெழுத்திட்டார். ஆனால் அவர்களது பதவிக்காலம் ஜூன் மாதம் வரைதான் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News