கிரிக்கெட் (Cricket)

1 பந்தில் 7 ரன்.. இதுதான் பாகிஸ்தான் ஸ்டைல்.. வைரலாகும் பீல்டிங் வீடியோ

Published On 2023-12-08 12:59 IST   |   Update On 2023-12-08 12:59:00 IST
  • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது.
  • கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நேற்று முன்தினம் கான்பெர்ராவில் தொடங்கியது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. கேப்டன் ஷான் மசூத் இரட்டை சதம் (201 ரன்) அடித்து களத்தில் இருந்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் மாட் ரென்ஷா ஒரு பந்தில் 7 ரன்கள் எடுத்தார். இந்த சம்பவம் 78-வது ஓவரில் அரங்கேறியது. இந்த ஓவரை அப்ரார் அகமது வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ரென்ஷா பவுண்டரிக்கு விரட்டினார். இதனை தடுத்த பாகிஸ்தான் கேப்டன் பந்து வீச்சாளர் பக்கம் வீசினார். அதனை வாங்கிய பாபர் அசாம் கீப்பர் பக்கம் உள்ள ஸ்டெம்ப் மீது எரிந்தார். கீப்பர் நின்ற சப்ராஸ் அகமது அதனை பிடிக்காமல் விட்டார். அவர் பின்னாடி இருந்த வீரரும் அதனை பிடிக்காததால் பந்து பவுண்டரி சென்றது. 3 ரன்கள் ஓடி எடுத்த நிலையில் பவுண்டரியை சேர்த்து ஆக மொத்தம் ஒரே பந்தில் 7 ரன்கள் எடுக்கப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் ஸ்டைலில் பீல்டிங் செய்கிறது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். 

Tags:    

Similar News