கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி அடித்த சிக்சரை டோனி சிக்சருடன் ஒப்பிட்ட கபில்தேவ்

Published On 2022-10-27 06:08 GMT   |   Update On 2022-10-27 06:08 GMT
  • 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம்.
  • டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி விளையாடிய அதிரடியான ஆட்டம் மறக்க இயலாத ஒன்றாகும்.

அவர் 53 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 82 ரன் எடுத்து வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.அவரது இந்த இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானதாகும்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் ஷாட்கள் எல்லாம் அபாரமாக இருந்தது. வேகப்பந்து வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய ஆட்டத்தின் 19-வது ஓவரின் 5-வது பந்தில் அவர் அடித்த சிக்சர் மிகவும் அற்புதமாக இருந்தது.

காலை பின் பக்கமாக (பேக்புட்) கொண்டு சென்று நேராக சிக்சர் அடித்தார்.

விராட் கோலியின் இந்த சிக்சரை முன்னாள் கேப்டன் கபில்தேவ் வியந்துள்ளார். அவர் 2011 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இலங்கை வீரர் குலசேகராவின் பந்தில் டோனி அடித்த சிக்சரோடு கோலியின் சிக்சரை ஒப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கபில்தேவ் 

மெதுவான பந்தில் நேராக சிக்சர் அடிப்பது மிகவும் கடினமானது. 2011 உலகக்கோப்பையை வெல்ல டோனி அடித்த சிக்சரை எத்தனை முறை பார்த்தோமோ அதேபோல கோலியின் சிக்சரையும் பார்க்கலாம். இந்த சிக்சரை ஆயிரம் முறை பார்க்கலாம்.

டோனியை போல விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அந்த சூழ்நிலையில் அணி வெல்ல யாராவது உதவினால் அது விராட் கோலி தான் என்று நாங்கள் விவாதித்தோம். அது போல அவர் அணியை வெற்றி பெற வைத்தார்.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு உலகக்கோப்பையை முதல் முறையாக பெற்றுக் கொடுத்தவர் கபில்தேவ். அவர் தலைமையிலான அணி 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிடைத்தது. டோனி தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையும் கிடைத்து இருந்தது.

இந்திய அணி இதுவரை 3 உலகக்கோப்பையை (1983, 2011-ஒரு நாள் போட்டி, 2007-இருபது ஓவர்) கைப்பற்றி உள்ளது.

Tags:    

Similar News