கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் 

இந்தியாவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஆறுதல் வெற்றி

Update: 2022-10-04 17:16 GMT
  • முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 227 ரன்கள் குவித்தது.
  • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார்.

இந்தூர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் வெளியேற, மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும்.

மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 18.3 ஓவர் முடிவில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 46 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 27 ரன்னும், ஹர்சல் படேல் 17 ரன்னும், தீபக் சாகர் 31 ரன்னும் அடித்தனர். உமேஷ் யாதவ் 20 ரன் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags:    

Similar News