கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுடன் நாளை கடைசி 20 ஓவர் போட்டி- ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் இந்தியா

Published On 2024-01-16 09:24 GMT   |   Update On 2024-01-16 09:24 GMT
  • கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார்.
  • நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பெங்களூரு:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. மொகாலியில் நடந்த முதல் போட்டி மற்றும் இந்தூரில் நடந்த 2-போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (17-ந் தேதி) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. தொடரை முழுமையாக ( ஒயிட்வாஷ்) கைப்பற்றும் வேட்கையில் உள்ளது.

கடந்த 2 போட்டியிலும் இந்தியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ஜெய்ஷ்வால் ஆகியோரும், பந்துவீச்சில் அக்ஷர் படேல், அர்ஷ்தீப்சிங் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

கேப்டன் ரோகித் சர்மா 2 ஆட்டத்திலும் டக்அவுட் ஆனார். இதனால் இந்த போட்டியில் ரன்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜிதேஷ் சர்மா இடத்தில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ், ஆவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும். முகேஷ்குமார், பிஷ்னோய் கழற்றி விடப்படலாம்.

இப்ராகிம் சர்தான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும 7 முறை மோதிய போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ்-18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Tags:    

Similar News