கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா அரைசதம்- இங்கிலாந்துக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2023-10-29 17:59 IST   |   Update On 2023-10-29 19:27:00 IST
  • டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
  • விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 4 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

இதனால் இந்தியா 40 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும், மறுபக்கம் ரோகித் சர்மா உறுதியாக நின்று விளையாடினார். அடுத்து ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார்.

ரன்கள் விரைவாக அடிக்க கடினமான நிலையில், இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இதனால் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. ரோகித் சர்மா 66 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

இந்தியா 30.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருக்கும்போது கே.எல். ராகுல் 58 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

80 ரன்களை கடந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 101 பந்தில் 87 ரன்கள் எடுத்த நிலையில் அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும்.

அடுத்து வந்த ஜடேஜா 8 ரன்னிலும், முகமது ஷமி 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 183 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

சூர்யகுமார் யாதவ் ஸ்கோரை 250 ரன்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என எண்ணத்தோடு விளையாடினார். அவருடன் 8-வது விக்கெட்டுக்கு பும்ரா ஜோடி சேர்ந்தார். பும்ரா சிங்கிள் ரன் எடுக்க திணறினார். இதனால் ஸ்கோர் வேகமெடுக்க மறுத்தது. 12 பந்துகளை சந்தித்து ரன் கணக்கை தொடக்காமல் இருந்தார்.

46-வது ஓவரை மார்க் வுட் வீசினார். முதல் பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்சருக்கு தூக்கினார். இதனால் இந்தியா 200 ரன்களைக் கடந்தது. 3-வது பந்தில் பும்ரா பவுண்டரி அடித்து ரன் கணக்கை தொடங்கினார். இந்தியாவுக்கு இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. ஸ்கோர் 208 ஆனது.

49 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் அரைசதத்தை நினைக்காமல், சிக்ஸ் அல்லது பவுண்டரி எதிர்பார்த்து அடித்து விளையாடினார். இதனால் 47-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 47 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும்.

9-வது விக்கெட்டுக்கு பும்ரா உடன் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தார். இதில், பும்ரா 16 ரன்களில் ரன் அவுட் ஆனார். குல்தீப் யாதவ் 9 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இந்நிலையில், 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களை இந்தியா எடுத்தது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

ரன் சுருக்கம் : 10 ஓவர் 35-2, 20 ஓவர் 73-3, 30 ஓவர் 131-3, 40 ஓவர் 180-5, 50 ஓவர் 229.

Tags:    

Similar News