கிரிக்கெட்

ஜெய்தேவ் உனத்கட்

ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் - வரலாற்று சாதனை படைத்த உனத்கட்

Published On 2023-01-03 18:48 GMT   |   Update On 2023-01-03 18:48 GMT
  • ரஞ்சி கிரிக்கெட்டில் முதல் ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார் உனத்கட்.
  • முதல் இன்னிங்சில் உனத்கட் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

புதுடெல்லி:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் யாஷ் துல் தலைமையிலான டெல்லி அணியும், ஜெய்தேவ் உனத்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அந்த அணியின் கேப்டன் யாஷ் துல் அறிவித்தார்.

அதன்படி, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக துருவ் ஷோரே, ஆயுஷ் பதோனி களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை சவுராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் வீசினார். டெல்லி அணியினர் முதல் 2 பந்துகளில் ரன் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து வீசிய 3-வது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரேவை உனத்கட் போல்டாக்கினார். அடுத்த பந்தில் ராவலை வீழ்த்தினார். இதனால் அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது.

ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த டெல்லி அணியின் கேப்டன் யாஷ் துல்லை உனத்கட் எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதன்மூலம் உனத்கட் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதோடு மட்டுமின்றி, தனது பந்துவீச்சில் எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை மளமளவென எடுத்தார் உனத்கட். ஒரு கட்டத்தில் 53 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹிரித்திக் ஷோக்கீன், ஷிவ்னாக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதானமாக ஆடிய ஷோக்கின் அரைசதம் அடித்தார். மறுபக்கம் பொறுமையாக ஆடி வந்த ஷிவ்னாக் 38 ரன்னில் ஆட்டம் இழந்தார். இறுதியில் டெல்லி அணி 35 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய உனத்கட் மொத்தமாக 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷிராக் ஜானி, ப்ரேராக் மன்கட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் 88 ஆண்டுகால ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாதனையை உனத்கட் படைத்தார்.

Tags:    

Similar News