null
டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து
- கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார்.
- கனடா சார்பில் ஹெலிகர் மற்றும் சாத் பின் சஃபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கனடா மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய கனடா அணியின் தொடக்க வீரரான கேப்டன் தில்பிரீத் பஜ்வா 39 பந்துகளில் 36 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். எனினும், துவக்க வீரராக களமிறங்கிய யுவராஜ் சம்ரா 65 பந்துகளில் 110 ரன்கள் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். கனடா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை குவித்தது.
நியூசிலாந்து சார்பில் மேட் ஹென்றி, ஜேகோப் டஃபி, கைல் ஜேமிசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 174 ரன்களை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய ஃபின் ஆலென் 8 பந்துகளில் 21 ரன்கள் (2 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து நடையை கட்டினர்.
தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் கிளென் பிலிப்ஸ் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரச்சின் 39 பந்துகளில் 59 ரன்கள் (4 பவுண்டரிகள், 3 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் 36 பந்துகளில் 76 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.
நியூசிலாந்து அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கனடா சார்பில் ஹெலிகர் மற்றும் சாத் பின் சஃபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.