கிரிக்கெட் (Cricket)

சொந்த மண்ணில் கெத்து காட்டுமா சிஎஸ்கே - இன்று பஞ்சாப் கிங்சுடன் மோதல்

Published On 2023-04-30 06:22 IST   |   Update On 2023-04-30 06:22:00 IST
  • இன்று மதியம் தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
  • சென்னை அணி இதுவரை 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

சென்னை:

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 41-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.

இந்தத் தொடரில் இதுவரை சென்னை அணி 5 வெற்றி, 3 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

தொடர்ந்து 4 அரைசதம் விளாசிய தொடக்க ஆட்டக்காரர் டேவான் கான்வே, அதிரடியாக ஆடி வரும் ரகானே ஆகியோர் கடந்த போட்டியில் சோபிக்காமல் போனது பின்னடைவாக அமைந்தது. பேட்டிங்கில் அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.

பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டே (14 விக்கெட்) கலக்கி வருகிறார். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (11), மொயீன் அலி ( 7) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

முந்தைய லீக் ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து மீளூம் உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியின் பேட்டிங் நிலையற்றதாக இருக்கிறது. கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் ஆகியோர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஆடவில்லை.

பந்துவீச்சில் ராகுல் சாஹர் தவிர மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கியது பாதிப்பை ஏற்படுத்தியது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் பஞ்சாப் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அத்துடன் உள்ளூர் சூழல் சென்னை அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும்.

வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையுடன் இரு அணிகளும் மல்லுக்கட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபே, அம்பத்தி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), பதிரானா, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா.

பஞ்சாப் கிங்ஸ்:

பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), அதர்வா டெய்ட், சிகந்தர் ராசா, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ராகுல் சாஹர், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு (42-வது) லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். போட்டித் தொடரில் இது ஆயிரமாவது ஆட்டமாகும். வலுவான ராஜஸ்தான் அணியை அடக்க வேண்டும் என்றால் மும்பை அணி தனது உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் முடியும். இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கை ஓங்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News