சினிமா

நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி

Published On 2019-02-08 07:37 GMT   |   Update On 2019-02-08 07:37 GMT
இளையராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் விஷாலுக்கு நெருக்கமான நடிகர்கள் நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள், என்று நடிகர் பார்த்திபன் பரபரப்பாக தெரிவித்துள்ளார். #Parthiban #Vishal #TFPC
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலுக்கு ஆதரவாக இருந்தவர் நடிகர் பார்த்திபன். சமீபத்தில் சங்கத்தின் துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழாவின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் நிகழ்ச்சிக்கு முன்பாக பதவியை ராஜினாமா செய்த அவர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. புறக்கணித்ததற்கான காரணம் குறித்து பார்த்திபன் கூறியதாவது:-

நான் இளையராஜாவின் தீவிர பக்தன் என்பது விஷாலுக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். ரஹ்மானிடம் தான் முதன்முறையாக ராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார்.

‘பலூன் பறக்க காற்று எப்படி காரணமோ அதை போல தான் தமிழர்களுக்கு இளையராஜா இசையும்’ என்று நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட் எழுதி வைத்து இருந்தேன்.



ஆனால் திடீர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான சரவணன் எனக்கு போனில் ‘நடிகர் ரமணா ஸ்கிரிப்ட் தயார் செய்து எடுத்து வருவார். நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியானது.

நிகழ்ச்சி நடந்த அன்று காலை வரை நிகழ்ச்சி தொகுப்பாளரை முடிவு செய்யவில்லை. நான் நந்தாவிடம் சொன்னபிறகு என்னையே தொகுப்பாளரை நியமிக்க சொன்னார்.

நான் ஒரு பெண் நிகழ்ச்சி தொகுப்பாளரை அவசரம் அவசரமாக ஏற்பாடு செய்தபிறகு நந்தா ‘வேண்டாம். நானே சொல்லிவிட்டேன்’ என்று திடீர் என்று கூறினார்.

நந்தாவிடம் இதை முன்பே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேன். அவர் மழுப்பினார். இதன்மூலம் நான் நிகழ்ச்சியில் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

அந்த நிகழ்ச்சியில் மேடை ஒருங்கிணைப்பு ஏனோ தானோ என்று இருந்தது. இளையராஜாவை மேடையில் அமரவைத்து அவமானப்படுத்தினார்கள். எனவே அன்று இரவே நான் இந்த நிகழ்ச்சியின் இயக்குனராக இருக்க முடியாது என்று தெளிவாக கூறிவிட்டேன்.



டிரம்ஸ் சிவமணி ஒப்புக்கொண்டு இருந்த ஒரு நிகழ்ச்சியை கேன்சல் செய்ய சொல்லி இந்த விழாவில் கலந்துகொள்ள கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவுக்கு பதிலாக மற்ற இசை அமைப்பாளர்களை வைத்து இளையராஜாவின் பாடலை இசைக்க திட்டமிட்டேன். இந்த இரண்டையுமே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் என்ன நினைத்தார்களோ அதை மட்டுமே செய்தார்கள்.

விஷாலுக்காக களத்தில் இறங்கி பணிபுரிவது நந்தாவும், ரமணாவும் தான். விஷாலின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்கள் தான் நடத்துகிறார்கள். விஷால் ஒரு வார்த்தை அவர்களிடம் ‘நிகழ்ச்சியை நீங்கள் நடத்துங்கள். கிரியேட்டிவ் வி‌ஷயங்களை பார்த்திபனிடம் விட்டு விடுங்கள்’ என்று கூறி இருக்கலாம். அதை சொல்லவில்லை என்பது எனக்கு வருத்தம்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு என்னை ஓரமாக உட்கார வைத்தார்கள்.

இப்படி மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆனால் எது நடந்தாலும் இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன்.



இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இளையராஜாவிடம் 3-ந்தேதி நிகழ்ச்சி நிரல் பற்றி ஆலோசிக்கும்போது என் பெயரை சொல்லும்போது ரமணா அவர் வேண்டாம் என்று கூறி இருக்கிறார். அப்போது அந்த சந்திப்பில் விஷாலும் உடன் இருந்து இருக்கிறார். இதை கேள்விபட்ட உடனே ராஜினாமா கடிதம் எழுதி கொடுத்துவிட்டேன்.

இப்போதும் விஷாலுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால் எனக்கு நேர்ந்த அவமானங்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ரஹ்மானிடம் நான் இந்த நிகழ்ச்சியின் டைரக்டர் என்றுதான் சம்மதிக்க வைத்தேன். அதனால் தான் என் ராஜினாமா வி‌ஷயத்தை சொல்லாமல் ரஹ்மானை கலந்துகொள்ள வீட்டிற்கு சென்று வழி அனுப்பி வைத்தேன்.

விஷாலை நான் ஆதரிப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். விஷால் நந்தாவையும் ரமணாவையும் முழுமையாக நம்புவது தவறு இல்லை. ஆனால் விஷாலை போல எல்லோரையும் அவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதே என் கோரிக்கை’.

இவ்வாறு அவர் கூறினார். #Parthiban #Ilayaraja75 #ARRahman #TFPC #Vishal #Nanda #Ramana

Tags:    

Similar News