சினிமா செய்திகள்

`புஷ்பா' என செல்லமாக அழைக்கப்பட்ட பலியான ரசிகை- கணவர் வெளியிட்டுள்ள உருக்கமான தகவல்

Published On 2024-12-06 12:03 IST   |   Update On 2024-12-06 12:03:00 IST
  • கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரசிகை.
  • ரசிகையை புஷ்பா என செல்லமாக அழைத்து வந்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.

அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரேவதி முன்பு வெளியான புஷ்பா முதல் பாகத்தை பார்த்தார். அன்று முதல் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகையாக மாறினார். அவரை அந்த பகுதி மக்கள் புஷ்பா என செல்லமாக அழைத்து வந்தனர்.

இது குறித்து அவருடைய கணவர் பாஸ்கர் கூறுகையில்:-

அவளது கடைசி தருணங்களும் குழந்தைகளை மகிழ்விப்பதாகவே இருந்தது. என்னுடைய குழந்தைகள் புஷ்பா-2 படம் பார்க்க செல்ல அடம்பிடித்தனர். கூட்டத்தை பொருட்படுத்தாமல் அவர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தேன்.

மனைவி, மகனை தியேட்டர் வளாகத்தில் விட்டு விட்டு என் மகளை அவருடைய பாட்டி வீட்டில் விட சென்று விட்டேன்.

நான் திரும்பி வருவதற்குள், என் மனைவியும் மகனும் அவர்களை விட்டுச்சென்ற இடத்தில் இல்லை. நான் அழைத்தபோது, அவர்கள் தியேட்டருக்குள் இருப்பதாக ரேவதி கூறினார். அதுதான் நான் கடைசியாக அவள் குரலைக் கேட்டேன்.

கட்டுக்கடங்காத கூட்டம் போலீஸ் தடியடியில் இருந்து தப்பிக்க, மகனைப் பாதுகாக்க முயன்றதில் ரேவதி படுகாயமடைந்தார். எனக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்ட போது அவரது ஒரு கல்லீரலை எனக்கு தானமாக வழங்கி என் உயிரை காப்பாற்றினார்.

இன்று அவர் உயிருடன் இல்லை. என் மகனும் ஆஸ்பத்திரியில் போராடிக் கொண்டிருக்கிறான் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags:    

Similar News