சினிமா செய்திகள்

லியோ "நா ரெடி" பாடலுக்கு வந்த புதிய சிக்கல்..

Published On 2023-07-09 04:16 GMT   |   Update On 2023-07-09 04:16 GMT
  • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற அதேசமயம் எதிர்ப்புகளும் கிளம்பியது.
  • இந்த பாடல் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'லியோ'. சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் இடம்பெற்றுள்ள விஜய் பாடிய 'நா ரெடி' பாடலை படக்குழு வெளியிட்டது. இந்த பாடல் யூ-டியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.



அதேசமயம் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் போதைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம் என்பவர் சென்னை மாநகர காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் அளித்திருந்தார்.



இதனிடையே இப்பாடலுக்கான சென்சார் சான்றிதழ் குறித்த தகவலை அறிந்து கொள்ள மத்திய தணிக்கைக் குழுவை அவர் அணுகியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய தணிக்கைக்குழு, 'நா ரெடி' பாடலின் பொது வெளியீட்டிற்கு இதுவரை யு, ஏ, யு/ஏ போன்ற எந்தவித சான்றிதழும் வழங்கப்படவில்லை எனவும், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் திரைத்துறை தணிக்கை சட்டத்தின் கீழ் வராது எனவும் தெரிவித்துள்ளது.



இந்நிலையில், அனுமதி பெறாமல் வெளியாகியுள்ள 'நா ரெடி' பாடலை நீக்கும்படி நீதிமன்றத்தை நாடப்போவதாக ஆர்.டி.ஐ. செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வரும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் அவர் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

"நா ரெடி" பாடலின் லிரிக் வீடியோவில் புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரை கொல்லும் என டிஸ்க்ளைமர் (Disclaimer) இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News