சீதா, ராம் என படங்கள் இருக்க, 'ஜானகி' பெயரில் என்ன பிரச்சனை? - கேரள உயர்நீதிமன்றம் கேள்வி
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் பெயரை வைக்கக்கூடாது.
- அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல
மத்திய அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா'
பிரவீன் நாராயண் இயக்கியுள்ள இந்தப் படம், ஜானகி என்ற பெண்ணின் சட்டப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு த்ரில்லர்.
இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு சீதா தேவியின் மற்றொரு பெயரான 'ஜானகி' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதற்கு சென்சார் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து சான்றிதழ் அளிக்க மறுத்தது.
ஜூன் 27 அன்று படத்தை வெளியிட படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த நிலையில் சென்சார் சான்றிதழ் மறுப்பால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளரான காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தாக்கல் செய்த மனுவை கேரள உயர்நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் விசாரித்தார்.
அப்போது 'ஜானகி' என்ற தலைப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து சென்சார் வாரியத்தை கேள்வி எழுப்பிய அவர், 'ஜானகி' என்பது எல்லா இடங்களிலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெயர் என்றும், அது எந்த குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அந்தப் பெயர் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை எவ்வாறு பாதிக்கும் என்றும் வினவினார்.
மேலும், "சீதா அவுர் கீதா என்ற பெயரில் திரையரங்குகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜானகி என்பது சீதா. ஆனால் அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. ராம் லகன் என்ற படம் உள்ளது. அதற்கும் யாரும் புகார் கூறவில்லை.
பிறகு, ஜானகி என்று பெயரில் என்ன பிரச்சனை வந்தது?. ஏன் தலைப்பையும் பெயரையும் மாற்ற வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து இதற்கு ஜூன் 30 ஆம் தேதிக்குள் விளக்கத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.