ஜன நாயகன் பட விவகாரம்- விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் கருத்து
- ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.
- ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்'. படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் சான்றிதழ் வழங்குவதற்கு சென்சாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த கோர்ட் வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது.
அறிக்கையில், கனத்த இயத்துடன் இந்த அப்டேட்டை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ள ஒரு சூழலில் ஜனநாயகன் படம் தள்ளிப் போகிறது. இந்த படத்தை சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறோம். இந்த முடிவு எங்களில் யாருக்கும் எளிதான ஒன்றல்ல. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்போம். உங்கள் அசைக்க முடியாத ஆதரவே எங்கள் மிகப்பெரிய பலம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து ஜனநாயகன் படத்திற்காக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
விஜயின் 'சச்சின்' பட இயக்குனர் ஜான் மகேந்திரன், நீ இன்னும் வலிமையுடன் எழுவாய் என்று கூறியுள்ளார்.
அஜய் ஞானமுத்து: டிமாண்டி காலனி படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில், இது ஒரு அதிகார துஷ்பிரயோகம். ஒரு படம் என்பது தனி நபரின் உழைப்பு அல்ல. அதில் நூற்றுக்கணக்கான பேர் உழைப்பும், பணமும் இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொண்டாடுவோம். தலைவன் படம் எப்போ ரிலீசோ அப்போ தியேட்டர் பக்கம் போகிறேன் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிபிராஜ் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகன் ரிலீசை சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒரு மாபெரும் வெற்றிக்கான சரியான களத்தை அமைத்துக் கொண்டிருக்கின்றன. நம்பிக்கையோடு இருங்கள்... நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என கூறியுள்ளார்.
சண்முகம் முத்துசாமி: டீசல் பட இயக்குனரான சண்முகம் முத்துசாமி வெளியிட்டுள்ள பதிவில், நான் செய்கின்ற தொழில் சினிமா. அதற்கு ஒரு சிக்கல் வருகிறது என்கிற போது ஆதரவாக நிற்க வேண்டியது என் கடமை என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் இசக்கி: ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் விசயத்தில் ஏன் இழுபறி இதில் அரசியல் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. எப்படி இருக்கிறது? மாநிலத்தில் அரசு அடித்தால் மத்திய அரசிடம் ஜனநாயகன் செல்லவேண்டும். அதைதான் மாநில அரசும் எதிர்பார்க்கிறது. ஆனால் ஜனநாயகன் மத்தியரசிடம் கெஞ்ச விரும்பவில்லை. இருவரும் ஒன்றுதானே என நினைக்கிறானோ என்னவோ தெரியவில்லை. மாநில அரசும் ஜனநாயகன் மத்தியரசிடம் போகட்டும் என எதிர்பார்த்து காத்திருந்தது. காரணம் அதை வைத்து "பார்த்திர்களா ஜனநாயகன் சங்கி"என கூறி வீழ்த்தலாம் என்று இருந்தது. ஆனால் அவன் சென்றது நீதிமன்றம். இது சரியான முடிவு வர இருக்கும் தேர்தலுக்கு. ஜனநாயகம் வென்றே தீரும் என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் ரத்னகுமார்: கடந்த சில மாதங்களாக பெரிய படங்கள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதைப் பார்ப்பது வேதனையாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகம் பெரும் ஆபத்தில் உள்ளது. வலுவாக இருங்கள் விஜய் சார் மற்றும் ஜனநாயகன் பட குழுவினர். கொரோனா காலத்தில் நீங்கள் தமிழ் சினிமாவை மீட்டெடுத்தீர்கள். கடைசியாக ஒரு முறையாவது நீங்கள் அதைச் செய்வீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். படம் எண்ணிக்கி வெளியீடு ஆகுதோ அன்னிக்கி தான் விழா என்று கூறியுள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி: அநியாயத்தின் உச்சகட்டம் இது எல்லாம். ஆனால் நீங்க பண்ணுங்க. நீங்க இப்படி பண்ண... பண்ண.. அவங்க (விஜய்) உயர்ந்து கொண்டேதான் போவாங்க. நாங்க கை விட்டுவிட மாட்டோம். பொங்கல் அன்று படம் வரவில்லை என்றால் என்ன? படம் வெளியாகும் நாள்தான் நமக்கு பொங்கல். காத்திருக்க நாங்கள் ரெடி. அதற்கு அது தகுதியானதும் கூட. நீ வா தல நாங்க இருக்கோம் என்று கூறியுள்ளார்.