சினிமாவைத் திட்டமிட்டு கொல்வதற்குச் சமம்.. ஜனநாயகன் சர்ச்சை பற்றி கார்த்திக் சுப்பாராஜ்
- சினிமா துறைக்கு இது ஒரு மிகக்கடினமான காலம்!!
- தயவுசெய்து ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களை ஓரம் தள்ளுங்கள்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.
இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.
எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதே நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம்ம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமாவின் காதலன் என்ற அடிப்படையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த விவகாரம் குறித்து நீண்ட பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சல்லியர்கள் போன்ற சுயாதீன (Indie) திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
மறுபுறம், நாளை வெளியாகவிருந்த விஜய் சாரினுடைய பிரம்மாண்டமான ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் தள்ளிப்போகிறது.
நாளை மறுதினம் வெளியாக வேண்டிய மற்றொரு பெரிய படமான பராசக்தி திரைப்படத்திற்கும் இன்னும் சான்றிதழ் கிடைக்காததால், பல இடங்களில் முன்பதிவு கூட இன்னும் தொடங்கவில்லை.
சினிமா துறைக்கு இது ஒரு மிகக்கடினமான காலம்!!
திரையரங்குகள் சிறிய பட்ஜெட் படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், ஓடிடி மற்றும் சாட்டிலைட் நிறுவனங்கள் சிறிய படங்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.
அந்தப் படங்களுக்கு இருக்கும் ஒரே வருமான ஆதாரம் திரையரங்குகள் மட்டுமே. அவற்றுக்குத் திரையரங்குகள் தராதது என்பது சினிமாவைத் திட்டமிட்டு கொல்வதற்குச் சமம்!!
பெரிய பட்ஜெட் படங்களைப் பொறுத்தவரை, தணிக்கை வாரியத்தின் கடுமையான காலக்கெடு விதிகளைப் பின்பற்றுவது மிகவும் கடினமாக உள்ளது.
வெளியீட்டுத் தேதியை அறிவித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கலைஞர்களுக்கு இது பெரும் படைப்புச் சுமையைத் தருகிறது.
தற்போதைய விதிகளின்படி பார்த்தால், வெளியீட்டுத் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பே படம் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமே இல்லை.
இந்த நடைமுறையைத் தணிக்கை வாரியம், தயாரிப்பாளர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இணைந்து எளிமைப்படுத்த வேண்டும்.
இல்லையெனில், பண்டிகை காலங்களில் பெரிய படங்கள் இதுபோல தள்ளிப்போவது ஒட்டுமொத்தத் திரையுலகையும் அழித்துவிடும்.
திரைத்துறையைச் சார்ந்தவர்களே.. தயவுசெய்து ரசிகர் சண்டைகள், அரசியல் காரணங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரங்களை ஓரம் தள்ளிவிட்டு, இந்தக் கலையை காக்க ஒன்றாக இணைவோம்.. சினிமாவை மீட்போம்!" என்று அழைப்பு விடுத்துள்ளார்.