பாய்: ஸ்லீப்பர் செல்- திரைவிமர்சனம்
ஸ்லீப்பர்செல் மூலம் டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் போல் தமிழகத்திலும் நடத்த தீவிரவாதக்குழு திட்டமிடுகிறது. இந்த திட்டத்தின் மூளையாக செயல்படும் நாயகன் ஆதவா ஈஸ்வரா, கோவையில் வசிக்கிறார்.
அப்போது அவரது மனைவி ஊரில் இருந்து வீட்டுக்கு வருவதாக போன் செய்கிறார். தனது ரகசியங்கள் மனைவிக்கு தெரிய கூடாது, என்பதால் அவருக்கு முன்னதாக வீட்டுக்கு செல்கிறார். அங்கு, ஒரு ஆணும், பெண்னும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
இறுதியில் அந்த ஆணும், பெண்ணும் யார்? வீட்டுக்கு வர வேண்டிய அவரது மனைவி என்ன ஆனார்? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஆதவா ஈஸ்வரா, கட்டுமஸ்தான உடம்பு, ஆறடி உயரம் என்று ஆக்ஷன் ஹீரோவுக்கான தகுதியோடு இருக்கிறார். ஆனால், அந்த தகுதிகளை சரியான முறையில் வெளிக்காட்டாமல், ஓடிக்கொண்டே இருக்கிறார். மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
எழுதி இயக்கியிருக்கும் கமலநாதன் புவன்குமார், ஸ்லீப்பர்செல்கள் யார் ?அவர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களை சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தின் முதல் பாதியில் ஒரே காட்சியை திரும்ப திரும்ப ஓடவிட்டு பார்வையாளர்களை கடுப்பேற்றுகிறார். ஒரே அறையில் முழு படத்தை எடுக்கும் முயற்சியாக கதை மற்றும் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் அதை சற்று தெளிவாகவும், புரியும்படியும் சொல்லியிருந்தால் வித்தியாசமான முயற்சியாக இருந்திருக்கும்.
இசை
இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு ஒரே அறையில் நடக்கும் சம்பவங்களையும், ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் நேர்த்தியாக இருக்கிறது.