சினிமா

கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்

Published On 2018-06-07 10:52 IST   |   Update On 2018-06-07 10:52:00 IST
ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் ‘காலா’ படத்தை கர்நாடகா திரையரங்குகளில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். #Kaala #Rajini
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.  இந்த படத்தில் அவருடன் நடிகர்கள் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத் மற்றும் நடிகைகள் ஈஸ்வரிராவ், ஹீமா குரேஷி, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின்னர் வெளியாகும் படம் என்பதனால் ரசிகர்களிடையே பரபரப்பும் ஆர்வமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் காலையிலேயே திரையரங்குகள் முன் ரசிகர்கள் குவிந்தனர்.

காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்தது.

எனினும், காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், காலா படம் உலகெங்கிலும் இன்று வெளியானது.



இதேவேளையில், கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து திரும்பி செல்ல செய்தனர்.
Tags:    

Similar News