சினிமா
பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் பா.ஜ.க.வில் இணைந்தபோது எடுத்த படம்

பா.ஜ.க.வில் இணைந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன்

Published On 2016-04-25 16:26 IST   |   Update On 2016-04-25 16:26:00 IST
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்ந்தார்.
தென்னிந்திய சினிமாவில் பவர்ஸ்டார் என்று அழைக்கப்படுவர் டாக்டர் சீனிவாசன். இவர் நடித்து வெளிவந்த ‘லத்திகா’ படம் தென்னிந்திய சினிமா பிரமுகர்களை ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து சந்தானத்துடன் இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அதைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் ‘ஐ’ படத்திலேயே இவருக்கும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றால் இவரது மார்க்கெட் எந்தளவுக்கு உயர்ந்து இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்படியாக தமிழ் சினிமாவில் காமெடியில் தனி முத்திரை பதித்து வந்த பவர் ஸ்டார் சீனிவாசன், ஒருகட்டத்தில் ஒருசில பிரச்சினைகளால் தமிழ் சினிமாவின் வாய்ப்புகளை இழந்து தவித்தார். இந்நிலையில், நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களுக்கு பிடித்தமான கட்சிகளில் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில், பவர் ஸ்டார் சீனிவாசன் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு, அக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார்.

இதற்காக இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.க.வில் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Similar News