சினிமா
நடிகர் கமல்ஹாசன்

காந்திய சிந்தனைகள் பற்றி எடுத்துக்கூறுவதற்கு தற்போது யாருமில்லை: கமல்ஹாசன்

Published On 2016-04-25 10:21 IST   |   Update On 2016-04-25 10:21:00 IST
காந்திய சிந்தனைகள் பற்றி எடுத்துக்கூறுவதற்கு தற்போது யாருமில்லை என்று கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
உலக புத்தக தினத்தையொட்டி, எழுத்தாளரும், கலைமாமணி விருது பெற்றவருமான ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய, ‘மகாத்மா காந்தியின் சத்திய சோதனை‘ என்ற தமிழ் புத்தக வெளியீட்டு விழா கோவை காளப்பட்டியில் நேற்று நடைபெற்றது. விழாவில், பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

மகாத்மா காந்தி ஒரு தலைவர் அல்ல, அவர் ஒரு அடையாளம். அவர் எளிய தொண்டனாய் இருந்ததால் தான் இவ்வளவு உயரத்தை அடைய முடிந்தது. அவருக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது. ‘அதனை செருப்பு போல் பயன்படுத்த வேண்டும். கிரீடம் போன்று பயன்படுத்தக்கூடாது’ என்பதை தெரிந்தவர் அவர். நாமும் மகாத்மாவாக முடியுமா? என்று கேட்டால் முடியும். முதலில் மனிதனாக மாறினாலே மகாத்மாவாக முடியும்.

எனது தகப்பனார் மகாத்மாவை பற்றி பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். சென்னைக்கு 20 முறையும், எங்கள் ஊருக்கு 3 முறையும் வந்தாராம். முதன் முறையாக வந்தபோது சுதந்திரப் போராட்டத்திற்காக நிதி திரட்டியுள்ளார். எனது தகப்பனார் காலணாவை போட்டுவிட்டு அவரது கையை தொட்டு பார்த்துள்ளார்.

2-வது முறை கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நெருங்க முடியவில்லை. 3-வது முறை அதிக கூட்டம் இருந்ததால் அப்பொழுதும் நெருங்க முடியவில்லை. முதன் முறை அவரது கையை தொட்டு பார்த்த போது காலையும் தொட்டு வணங்கியிருந்தால் புண்ணியம் கிடைத்திருக்கும். அகிம்சை வழியை கடைபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதை கடைபிடிக்க பழகிவிட்டால் அதை விட எளிது வேறு எதுவும் இல்லை. காந்திய சிந்தனைகள் அதிகம் உள்ளன. அவற்றை பற்றி எடுத்துக் கூறுவதற்கு தற்போது யாருமில்லை. நல்லவர்களை அடையாளம் கண்டு அவர்களை பாராட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி, கல்லூரிகளில் வெறும் பாடப்புத்தகத்தை மட்டும் படித்தால் அறிவு வளராது. அதற்கு பதிலாக ஏராளமான புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது. இது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இருந்தபோதிலும் இன்னும் அதிகமாக புத்தகங்களை வாசிக்க வேண்டும். வீட்டில் இருக்கும்போது பலர் பொழுதுபோகவில்லை என்பதற்காக டி.வி. முன்பு அமர்கின்றனர். இல்லை என்றால் செல்போனில் விளையாடுகிறார்கள். அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் புத்தகங்களுக்கு கொடுப்பது இல்லை. குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புத்தகங்களை விரும்பி வாசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News