கார்
டாடா மோட்டார்ஸ்

ஃபோர்டு ஆலையில் உருவாகும் டாடா எலெக்ட்ரிக் கார்கள்?

Published On 2022-04-18 11:57 GMT   |   Update On 2022-04-18 11:57 GMT
ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நிறுவனங்கள் இடையே இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் விற்பனை விவகாரத்தில் அனுமதி வழங்க கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என கூறப்படுகிறது. 

இதன் இடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் சனந்த் உற்பத்தி ஆலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடி முதலீடு செய்து 2026 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது.



முன்னதாக ஃபோர்டு சனந்த் ஆலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் யாரும் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடம் வாக்குறுதி அளித்து இருக்கிறது. இதன் மூலம் சுமார் 23 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். 

குஜராத் மாநிலத்தின் சனந்த் நகரில் உற்பத்தியை துவங்கிய முதல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் ஒன்றாக இருந்தது. நானோ காரை உற்பத்தி செய்ய ரூ. 4  ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்து இருந்தது. தற்போது  இந்த ஆலையில் டியாகோ, டிகோர் மற்றும் டிகோர் EV போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சனந்த் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 
Tags:    

Similar News