கார்
இந்தியாவில் உயர்ந்து வரும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை
இந்தியாவில் மக்கள் பழைய கார்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அதன் விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட கார்களே அதிகம் விற்பனை ஆகி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 10 சதவீதம் வரை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயன்படுத்தப்பட்ட கார்கள் தற்போது கிடைப்பதே அரிதாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகரிக்கும் பணவீக்கம், வேலைவாய்ப்பு குறித்த பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் புதிய கார்கள் வாங்கப்படுவது குறைவதனால் பழைய கார்களை விற்க யாரும் முன்வருவதில்லை என்பதால் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸூகியின் நிர்வாக இயக்குநர் ஷாசங் ஸ்ரீனிவாட்சா கூறுகையில், வாடிக்கையார்கள் புது கார் ஒன்றை வாங்க வேண்டும் என பணம் சேர்த்து அல்லது கடனுக்கு விண்ணப்பித்து பணம் கைக்கு வந்தவுடன் வாங்க வரும்போது அந்த காரின் விலை ஏறி விடுகிறது. இதனால் அவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்குவது தான் சுலபமாக இருக்கிறது. மேலும் பெரும்பாலான மாநிலங்கள் பழைய கார்களை அழிக்கும் திட்டங்களை கொண்டு வருவதால் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
கொரோனா காலக்கட்டத்தில் ஒருவர் பழைய காரை விற்றுவிட்டு புதிய காரை வாங்குவது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மகிந்திரா நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.