கார்
பிப்ரவரி 23-ம் தேதி வெளியாகும் புதிய மாருதி சுஸுகி பலேனோ
வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வரும் பிப்.23-ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த காரின் தோற்றம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதன்படி இந்த 2022 மாருதி பலேனோ கார் சிக்மா, டெல்டா, ஸெடா மற்றும் ஆல்ஃபா என்கிற நான்கு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த காரின் டேஸ்போர்ட் நீலம், சில்வர் மற்றும் அடர் நீலம் என மூன்று விதமான நிறங்களில் வருகிறது. வாடிக்கையாளர்கள் நீலம் மற்றும் கருப்பு கலவையில் இருக்கை மற்றும் கதவு ட்ரிம்களை அலங்கரித்து கொள்ளலாம்.
கதவுகளில் பவர் கண்ணாடிகள், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ரிமோட் மைய லாக்கிங் மற்றும் டிஜிட்டல் ஓட்டுனர் திரை உடன் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்படவுள்ளது.
பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு இரட்டை காற்று பைகள் தரப்பட்டுள்ளன. இதுதவிர பின்பக்கம் பார்க்கிங் சென்சார்கள், ஏபிஎஸ் மற்றும் அதிவேக எச்சரிக்கை கருவிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கார் ஆரம்ப நிலையில் வரக்கூடிய வேரியண்ட் என்பதால் சக்கரங்களில் வண்ணங்கள் இல்லாமல் இரும்பு நிறம் தான் தரப்பட்டிருக்கும்.
இந்த 2022 பலேனோ காரில் 1.2 லிட்டர் கே12என் ட்யுல்ஜெட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இது அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும்.
பலேனோ சிக்மா வேரியண்ட்டில் டிரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே தரப்படும் மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு எதுவும் கொடுக்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்த புதிய பலேனோ காரின் விலையை மாருதி அறிவிக்கப்படவில்லை.
இந்த காரினை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் மாருதி நெக்ஸா இணையதள பக்கத்தில் புக் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தங்களுக்கு பிடித்த விதத்தில் புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரினை வடிவமைத்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.