கார்
விற்பனையில் புது மைல்கல் எட்டிய நெக்சான் இ.வி.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானது முதல் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனையை தொடர்ந்து அதிகப்படுத்துவதில் நெக்சான் இ.வி. தினி இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் இந்திய சந்தை விற்பனையில் டாடா நெக்சான் இ.வி. மாடல் இதுவரை 13,500 யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் பயணிகள் வாகனங்கள் பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடலாகவும் நெக்சான் இ.வி. இருக்கிறது.
நெக்சான் இ.வி. மாடலில் 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9.14 நொடிகளில் எட்டி விடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் மோட்டார் 127 பி.ஹெச்.பி. திறன், 245 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நெக்சான் இ.வி. மாடல் இந்திய விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்தது. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் 70 சதவீதத்திற்கும் அதிக பங்குகளை கொண்டிருக்கிறது.
டாடா நெக்சான் இ.வி. மாடலை டி.சி. ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும் போது ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். எனினும், வழக்கமான சார்ஜர் பயன்படுத்தும் போது 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் ஆக 8.30 மணி நேரம் ஆகும்.