இந்திய விற்பனையில் அசத்திய பிஎம்டபிள்யூ
- பிஎம்டபிள்யூ G 310 சீரிசில் G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும்.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா சிறப்பான அரையாண்டு, காலாண்டு மற்றும் ஜூன் மாத விற்பனையை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. பிஎம்டபிள்யூ, மினி மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டராட் என மூன்று பிரான்டுகளும் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 4 ஆயிரத்து 667 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது 50 சதவீதம் அதிகம் ஆகும். பிஎம்டபிள்யூ இருசக்கர வாகனங்கள் விற்பனையை அதிகப்படுத்தியதில், புதிய என்ட்ரி லெவல் G 310 சீரிஸ் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதில், G 310 R, G 310 RR மற்றும் G 310 GS போன்ற மாடல்கள் அடங்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட G 310 சீரிஸ், ஒட்டுமொத்த விற்பனையில் 90 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவைதவிர பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் S 1000 RR, R 1250 GS/ GSA மற்றும் C400 GT போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
புதிய என்ட்ரி லெவல் மாடல்கள் மட்டுமின்றி, வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் சிறப்பான நிதி சலுகைகளும் விற்பனை அதிகரிக்க காரணம் என்று பிஎம்டபிள்யூ மோட்டராட் தெரிவித்து இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது G 310 சீரிஸ் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், எப்போது வெளியாகும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.