விரைவில் இந்தியா வரும் இரு பென்ஸ் எலெக்ட்ரிக் கார்கள்
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
- இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரு எலெக்ட்ரிக் கார் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன.
சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். எனினும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.