ஆட்டோமொபைல்

சோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார்

Published On 2019-04-25 11:42 GMT   |   Update On 2019-04-25 11:42 GMT
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் சீரிஸ் 3 கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. #BMW



சொகுசு கார்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பி.எம்.டபுள்யூ. நிறுவனம் நீளமான சக்கர பகுதிகளைக் கொண்ட புதிய ரக மாடலை வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் புதிய பி.எம்.டபுள்யூ. காரில் L வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 3டி டெயில்-லேம்ப்கள், தடிமனான பம்ப்பர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் 3 சீரிஸ் வரிசையில் 7-வது தலைமுறை கார்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் சீன சந்தையைக் குறிவைத்து தற்போது இப்புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் வழக்கமான அளவை விட 41 மி.மீ. அதிகமாகும். அதாவது சக்கரங்கள் 2,851 மி.மீ. சுற்றளவு கொண்டது. இந்தக் காரின் நீளம் 4,719 மி.மீ., அகலம் 1,827 மி.மீ., உயரம் 1,459 மி.மீ. ஆகும். 



இதில் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உள்ளது. இதன் நீளம் அதிகமாக உள்ளதால் முன் சீட்டுக்கும் பின் சீட்டுக்கும் இடையில் அதிக இடைவெளி தரப்பட்டுள்ளது. இதனால் சவுகரியமாக பயணிக்க முடியும். வான் அழகை ரசிக்க கண்ணாடியால் ஆன மேற்கூரை (சன்-ரூஃப்) வழங்கப்பட்டுள்ளது.

இதில் பி.எம்.டபுள்யூ.வின் பர்சனல் அசிஸ்டென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் பல டிஜிட்டல் சேவைகள் உள்ளன. குரல் வழி கட்டுப்பாட்டு வசதியும் இதில் உள்ளது. இந்தியாவில் சமீபத்தில்தான் பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான்ட் டுரிஸ்மோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்புதிய மாடல் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மே 16 ஆம் தேதி இந்நிறுவனம் பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 5 மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே 3 சீரிஸ் மாடல் அறிமுகம் இருக்கும் என்று தெரிகிறது.

புகைப்படம் நன்றி: Indianautosblog
Tags:    

Similar News