துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:38 IST   |   Update On 2025-12-14 08:40:00 IST

துலாம் ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி புதன் இணைந்திருக்கிறார். எனவே வருமானம் வந்தாலும் அதைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். 'சேமிக்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பணம் கைகளில் புரளும் நேரத்தில் சுபச்செலவுகளைச் செய்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவினர் பகை அகலும். ஊர் மாற்றம் பற்றியும், உத்தியோக மாற்றம் பற்றியும் நீங்கள் சிந்தித்தபடியே செயல்படுவீர்கள்.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அவர் இப்பொழுது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். குரு, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக இருந்தாலும், அதன் பார்வைக்கு பலன் அதிகம். எனவே இதுவரை இருந்த இடா்பாடுகள் அகலும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே.. கொடுத்த கடனை வாங்க முடிவில்லையே..' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

சகாய ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் காரிய வெற்றியும், பணப் புழக்கமும் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று படிப்பது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்தால் அதில் அனுகூலம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர். அவர் 3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது வழக்குகள் சாதகமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் நிலையத்தை இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். தூரத்து உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். தொடர்ச்சியாக வந்த கடன் சுமை குறைய, புதிய வழிபிறக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் நேரம் இது.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய பொறுப்புகள் தேடிவரும். அதிகார அந்தஸ்திற்கு சிலர் உயர்த்தப்படுவர். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தானாக வரும் பதவிகளை ஏற்றுக்கொள்ள முன்வருவீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாற்றினத்தவர்களின் உதவி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாசல் தேடி வரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 17, 18, 19, 23, 24, ஜனவரி: 3, 4, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News