search icon
என் மலர்tooltip icon

  துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

  துலாம்

  மாசி மாத ராசிபலன்

  சாதுரியமாக பேசி காரியங்களை சாதிக்கும் துலாம் ராசி நேயர்களே!

  மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தனாதிபதி செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண இயலும். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் எடுக்கும் புது முயற்சியில் அனுகூலம் உண்டு.

  கும்பம் - புதன்

  மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் பலவித வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு வியப்பர்.

  மகரம் - சுக்ரன்

  மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதாலும், அவர் தனாதிபதி செவ்வாயோடு இணைவதாலும் இக் காலம் ஒரு இனிய காலமாக அமையும். குறிப்பாக ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். `சுக்ர மங்கள யோகம்' இருப்பதால் பெண் பிள்ளைகள் வழியில் சுபச்சடங்குகள் ஏற்படலாம். கல்யாணம், காதுகுத்து போன்ற காரியங்களில் இருந்த தடை அகலும். தொட்டது துலங்கும் நேரமிது.

  மீனம் - புதன்

  மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். பாக்கிய-விரயாதிபதியான புதன் நீச்சம் பெறும் பொழுது, பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டு. விரயங்கள் கூடுதலாக இருக்கும். `கூட்டுத் தொழில் இருந்து பிரிந்து தனித்து இயங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். தந்தை வழி உறவில் மனக்கசப்பு ஏற்படலாம். வாகனப் பழுதுகள் அதிகரித்து வாட்டங்களைக் கொடுக்கும். தேக நலனுக்காகவும் செலவிடும் சூழ்நிலை உண்டு. எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி காண இயலும்.

  கும்பம் - சுக்ரன்

  மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன், 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளைப் பற்றிய கவலை அதிகரிக்கும். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது குறை சொல்வர். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றம், இட மாற்றம் திருப்தி அளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கான தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தாலும், அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள்.

  பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் வரலாம். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேண்டிய முதலீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், சம்பள உயர்வும் வரலாம். கலைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  பிப்ரவரி: 19, 20, 24, 25,

  மார்ச்: 2, 3, 4, 8, 9.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

  துலாம்

  தை மாத ராசிபலன்

  இனிய பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் துலாம் ராசி நேயர்களே!

  தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அர்த்தாஷ்டமச் சனி விலகி விட்டதால் இனி உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும்.

  மேஷ-குருவின் சஞ்சாரம்!

  மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம் தான். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவனர் குரு பகவான். ராசி நாதன் சுக்ரனுக்கு பகை கிரகமாக குரு பகவான் விளங்கினாலும், அவர் பார்வைக்கு ஓரளவு நற்பலன் கிடைக்க வேண்டுமல்லவா? அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சகோதரர்கள் மூலம் ஒருசில நல்ல காரியங்கள் நடைபெறும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும். உறவினர்களின் மனஸ்தாபங்கள் மாறும். பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடி நிலை அகலும்.

  தனுசு-சுக்ரன்!

  ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் மூன்றாமிடத்திற்கு செல்வது யோகம் தான். வெற்றிகள் ஸ்தானத்திற்கு செல்லும் ராசிநாதன் உங்களுக்கு வெற்றிகளை வழங்குவார். குறிப்பாக சகோதரர்களுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். மனஉறுதி அதிகரிக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் கிட்டும்.

  மகர-புதன்!

  ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் சுகங்களும், சந்தோஷங்களும் இல்லத்தில் நிலவும். முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்போடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணி கிடைக்கும். தொழிலில் புதிய நண்பர்கள் இணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர். பணியாளர்களின் தொல்லை அகலும்.

  மகர-செவ்வாய் சஞ்சாரம்!

  பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். மகரம், செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம் பெறுவது நன்மை தான். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தன வரவு திருப்தி தரும். உதிரி வருமானங்கள் வந்து உள்ளத்தை மகிழ்விக்கும். வாழ்க்கைத் துணையின் வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி அனுகூலம் தரும். அயல்நாட்டு நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தொழிலை விரிவு செய்யும் சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவீர்கள். கலைஞர்களுக்கு வெற்றிப்பாதையில் செல்லும் வாய்ப்பு உண்டு. மாணவ மாணவியர்களுக்கு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்கள் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  ஜனவரி: 22, 23, 24, 28, 29, பிப்ரவரி: 3, 4, 5, 9, 10.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

  துலாம்

  மார்கழி மாத ராசிபலன்

  சோதனைகளை சாதனைகளாக மாற்றும் துலாம் ராசி நேயர்களே!

  மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரை மேஷத்தில் உள்ள குரு பகவான் பார்க்கிறார். இந்த குரு-சுக்ர பார்வை யின் விளைவாக திட்டமிடாத சில காரியங்கள் வெற்றியை தரும். விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழிலில் வளர்ச்சியும், லாபமும் கூடுதலாக கிடைக்கும். அர்த்தாஷ்டமச் சனியும் இம்மாதம் விலகப்போவதால் அனைத்து வழிகளிலும் நன்மை உண்டு. யோகம் தரும் சிறப்பு தலங்களை தேர்ந்தெடுத்து, விலகும் சனியை விரும்பி வழிபடுவது நல்லது.

  கும்ப ராசியில் சனி

  மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சியின் விளைவாக அர்த்தாஷ்டமச் சனி விலகுகிறது. எனவே இனி தடைகள் அகலும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறப் போகிறது. தொழில் முன்னேற்றம் கூடும். பொன், பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சகப் பணியாளர்களுக்கு கிடைத்த வெளிநாட்டு யோகம் இனி உங்களுக்கும் கிடைக்கப்போகிறது.

  விருச்சிக-சுக்ரன்

  மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல் கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். தங்கம், வெள்ளி, ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் நடைபெறலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

  தனுசு-செவ்வாய்

  தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது இடம், பூமி, வாங்கும் யோகம் உண்டு. பத்திரப் பதிவில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்போடு சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்படுவீர்கள். அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.

  தனுசு-புதன்

  மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புத-ஆதித்ய யோகம் உருவாவதால் அரசு வழி உத்தியோக முயற்சி கைகூடும். வியாபாரம் வெற்றி நடைபோடும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் ஊதிய உயர்வும் உண்டு. கலைஞர்களுக்கு பண வரவு திருப்தி தரும்.

  மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. பெண்களுக்கு தேவைக்கேற்ற பணம் தேடிவந்து சேரும். உறவினர் பகை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

  பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  டிசம்பர்: 17, 18, 27, 28.

  ஜனவரி: 1, 2, 7, 8, 9, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

  துலாம்

  கார்த்திகை மாத ராசிபலன்

  விட்டுக்கொடுத்து வெற்றி பெறும் துலாம் ராசி நேயர்களே!

  கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியைக் குரு பகவான் பார்க்கின்றார். ராசி நாதன் சுக்ரன் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். சுக்ரன் அஷ்டமாதிபதியாகவும் திகழ்வதால் அது நீச்சம் பெறும் போது, நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள் விரும்பத்தக்க விதம் அமையும்.4-ல் சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

  வக்ர குருவின் ஆதிக்கம்

  மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு அதிபதியானவர் சுக்ரன். அவருக்கு பகை கிரகமாக விளங்கும் குரு பகவான் வக்ரம் பெறும் பொழுது நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். சகாய ஸ்தானத்திற்கும், ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியான குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வெற்றி வாய்ப்புகள் படிப் படியாக வந்து சேரும்.

  வீடு கட்டுவது அல்லது வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். சகோதர வர்க்கத்தினரால் சகாயம் ஏற்படும். உத்தியோகம் சம்மந்தமாக நீங்கள் எடுத்த புது முயற்சிகளில் பலன் கிடைக்கும். அதிகாரிகளின் அனுகூலங்களும், ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பும் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.

  துலாம்-சுக்ரன்

  உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெறுவது யோகம்தான். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வரும். அதே நேரம் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசியான உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தற்காலிகப் பணியில் உள்ளவர்களுக்கு நிரந்தரப் பணியாக மாறும் சூழல் உண்டு.

  ஆடை, ஆபணரங்கள் வாங்குவது, அயல்நாட்டு முயற்சியில் அக்கறை செலுத்துவது, தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்வது வரை ஒவ்வொன்றாக நடைபெறலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் சொற்களுக்கு மதிப்புக் கொடுப்பர். வீட்டில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை உண்டு.

  தனுசு-புதன்

  உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானாதிபதி புதன், கார்த்திகை 14-ம் தேதி சகாய ஸ்தானத்திற்கு வருவது யோகம் தான். எனவே அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட எடுத்த முயற்சி வெற்றி தரும். இதுவரை சிக்கனத்தைக் கடைப்பிடித்து வந்த நீங்கள் இனி செலவிற்கு அஞ்சமாட்டீர்கள்.

  வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கி மகிழும் நேரமிது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். உத்தி யோகத்தில் உள்ள நுணுக்கங்களை அறிந்துகொண்டு விருப்ப ஓய்வில் வெளிவரலாமா? என்று சிந்திப்பீர்கள்.

  துலாம்

  ஐப்பசி மாத ராசிபலன்

  18.10.2023 முதல் 16.11.2023 வரை

  உதவும் குணத்தால் உள்ளத்தில் இடம் பிடித்த துலாம் ராசி நேயர்களே!

  ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத்தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். மேஷத்தில் உள்ள குரு உங்கள் ராசியையும், ராசிநாதன் சுக்ரனையும் பார்க்கின்றார். எனவே இந்த மாதம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமாக அமையப் போகின்றது. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். தங்கு தடைகள் தானாக விலகும்.

  சனி வக்ர நிவர்த்தி!

  ஐப்பசி மாதம் 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு இப்பொழுது அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. வக்ர நிவர்த்தியான பின்பு அதன் பலம் கூடுகின்றது. சுபச்செலவுகள் அதிகரிக்கும். துணிந்து முடிவெடுத்து நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள். ஆன்மிகப்பற்று அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். உடல் நலனுக்காக ஒரு தொகையைச் செலவிடும் வாய்ப்பு உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். அதனால் மனக்கலக்கம் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு வேறு வேலைக்கு மாறும் ஆர்வம் உருவாகும்.

  குரு வக்ரம்!

  மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகமாகும். எனவே அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். எதிரிகள் பலமிழக்கும் இந்த நேரத்தில் சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் உயர்வுகளும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். நல்ல சந்தர்ப்பங்கள் நாடி வரும் நேரமிது.

  நீச்சம் பெறும் சுக்ரன்!

  ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரத்தில் சுக்ரன் அஷ்டமாதிபதியாகவும் விளங்குவதால் இழப்புகளை ஈடுசெய்ய நல்ல வாய்ப்புகளும் வந்து சேரும். மாற்று மருத்துவத்தின் மூலம் உடல்நலம் சீராகும். என்றைக்கோ வாங்கி்ப்போட்ட இடம் பலமடங்கு விலை உயர்ந்து விற்பனையாகி மகிழ்ச்சியைத் தரும். குறுக்கீடு சக்திகள் அகலும். கொடுக்கல் வாங்கல்கள் சரள நிலைக்கு வரும்.

  விருச்சிக புதன்!

  ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது தனவரவு திருப்தி தரும். அதே நேரம் விரயங்களும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். வீடு மாற்றம், இட மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவைகள் நிகழும் நேரமிது. வரும் மாற்றங்களால் நல்ல ஏற்றங்கள் வரலாம். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது நடைபெறும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்கள் அதில் புதுத்துறையைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ-மாணவியர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் படிப்பு சிறப்பாக அமையும். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பொருளாதார நிலை திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களையும், சொத்துக்களையும் வாங்கும் சூழ்நிலை உண்டு.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 23, 24, நவம்பர் 2, 3, 7, 8, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆரஞ்சு.

  துலாம்

  புரட்டாசி மாத ராசிபலன்

  18-09-2023 முதல் 17-10-2023 வரை

  சாந்த குணத்தோடு பிறருக்கு உதவி செய்யும் துலாம் ராசி நேயர்களே!

  புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் குரு பார்க்கிறார். எனவே நினைத்தது நடக்கும். நேச மனப்பான்மை கொண்டவர்கள் பாசத்தோடு பழகுவதோடு பண வரவிற்கும் வழிவகுத்துக் கொடுப்பர். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். கடல் தாண்டிச் செல்லும் யோகம் கூட ஒரு சிலருக்கு உண்டு. ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை மட்டும் அடிக்கடி வந்து அலைமோதும்.

  புதன் வக்ரம்

  புரட்டாசி 10-ந் தேதி, கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். கன்னி ராசி புதனுக்கு உச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். சுபவிரயங்கள் அதிகரிக்கும். தூர தேசத்திலிருந்து உங்களுக்கு ஆதரவு தருவதாக நண்பர்கள் எடுத்துரைப்பர். தொழிலைப் பொறுத்தவரை புதிய பங்குதாரர்கள் வந்திணைய வாய்ப்பு உண்டு. தொழிலுக்கான கூடுதல் முதலீடுகளைச் செய்ய, கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெறும் விரயமாக மட்டுமல்லாமல் வருமானம் வந்தே உங்களுக்கு செலவு ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

  துலாம் - செவ்வாய்

  புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தனாதிபதி செவ்வாய் தங்கள் ராசியில் சஞ்சரிக்கும் இந்தநேரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட்டும், புகழும் கூடும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இடம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். எதிரிகளின் தொல்லை குறையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். வளமான எதிர்காலத்திற்கு வழிகூறும் விதத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

  துலாம் - புதன்

  புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத விரயம் உண்டு. இடமாற்றம், ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு ஏற்படும். பெற்றோரின் உறவில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் தக்க வைத்துக் கொள்வது நல்லது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு வருமானம் திருப்தி தரும். மாணவ-மாணவிகள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தினால் மதிப்பெண் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதாரம் திருப்தி தரும். வாழ்க்கைப் பாதையில் இருந்த குறுக்கீடு அகலும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தானாக கைகூடி வரும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  செப்டம்பர்: 20, 21, 22, 25, 26, அக்டோபர்: 6, 7, 11, 12, 17. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

  துலாம்

  தமிழ் மாத ராசிபலன்கள்

  18-08-2023 முதல் 17-09-2023 வரை

  எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காணும் துலாம் ராசி நேயர்களே!

  ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள். மேலும் இம்மாதம் மீண்டும் அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கம் வரப்போகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லையும் அதிக விரயங்களும் ஏற்படலாம். மீண்டும் பழைய பிரச்சினைகள் தலைதூக்கும்.

  இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை வந்துசேரலாம். எதிரிகளின் பலம் கூடும் என்பதால், எதையும் யோசித்து செய்வது நல்லது. கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 8-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது மாற்றங்கள் உருவாகும்.

  கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேர்வதோடு, புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து எதிர்காலம் பற்றி முடிவெடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தபடியே இடமாற்றமும், இலாகா மாற்றமும் வரலாம். விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.

  கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது விரயங்கள் அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக செலவிடுவது நல்லது. வாங்கிய சொத்துகளை விற்க நேரிடும். அதில் வரும் ஆதாயத்தைக் கொண்டு பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக செலவிடுவீர்கள்.

  தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். இருப்பினும் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வது பற்றி யோசிப்பீர்கள். பாகப்பிரிவினை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார்.

  வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றத்தில், உங்கள் ராசிக்கு சனி பகவான், அர்த்தாஷ்டமச் சனியாக வருகிறாா். சுமார் ௪ மாதங்களே மகரத்தில் சஞ்சரிக்கும் சனியால், பண நெருக்கடி அதிகரிக்கும். பல காரியங்கள்ச்தடையாக நிற்கும். நடக்கும் தொழிலில் பங்குதாரர்களோடு ஏற்பட்ட பிரச்சினையால் தடைபட்டு நிற்கக்கூடும். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

  உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருசிலர் பணி மாற்றம் செய்ய முன்வருவர். புதன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சாித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். படிப்படியாக தடைப்பட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.

  பணப்புழக்கமும், சுபவிரயங்களும் அதிகரிக்கும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. சொந்தங்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அகலும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் நீங்கள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பலத்த போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும்.

  உத்தியோகத்தில் உள்ளவர்கள், சலுகைகள் கிடைத்து சந்தோஷமடைவர். கலைஞர்களுக்கு கைநழுவி சென்ற வாய்ப்புகள் மீண்டும் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். வீடுமாற்ற சிந்தனைகள் மேலோங்கும். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் வரும் தொல்லைகளை சமாளிக்க வேண்டிய சூழல் உருவாகும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 23, 24, 29, 30, செப்டம்பர்: 8, 9, 10, 13, 14.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

  துலாம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  17.7.23 முதல் 17.8.23 வரை

  எவரிடத்திலும் எளிதாகப் பழகும் துலாம் ராசி நேயர்களே!

  ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி செவ்வாயோடு இணைந்து லாப ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். குரு பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே பொருளாதாரத்தில் மேம்பாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தேடி வந்த வரனால் திருமண முயற்சி கைகூடும். செய்தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். மனக்குழப்பம் அகன்று மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள்.

  மேஷ - குரு சஞ்சாரம்

  நவக்கிரகத்தில் சுப கிரகமான குரு பகவான், இப்பொழுது மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதோடு, சகோதர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். கேதுவின் பார்வையும், சகோதர ஸ்தானத்தில் பதிகிறது. எனவே உடன்பிறப்புகளோடு ஒரு ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகை கிரகமாக இருந்தாலும் குருவின் பார்வைக்கு பலன் உண்டு. எனவே அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். காலாவதியாகிப் போன கடன்கள் வசூலாகும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. வாகனங்கள் வாங்கி மகிழ வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்.

  குருவின் பார்வை பலத்தால் சகோதர ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம் புனிதமடைவதால் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். தொழிலுக்கான மூலதனங்களை நீங்கள் போட்டு, அதை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதர வர்க்கத்தினர் கையில்ஒப்படைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். பூமிப் பிரச்சினை சுமுகமாக முடியும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் உங்கள் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய முன்வருவர்.

  சிம்ம - புதன்

  ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் புதன். விரயாதிபதி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, விரயத்திற்கேற்ற லாபம் வந்து கொண்டேயிருக்கும்.

  எந்தக் காரியத்தைச் செய்ய நினைத்தாலும் பணத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டியதில்லை. காரியத்தை தொடங்கிவிட்டால் பணப்புழக்கம் தானாகவே வந்து சேரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். ஒரு சிலருக்கு பழைய தொழிலைக் கொடுத்து விட்டு புதிய தொழில் தொடங்கலாமா? என்ற சிந்தனை மேலோங்கும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி உதவி கிடைத்து தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் பக்கபலமாக இருப்பர். கலைஞர்களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ - மாணவிகள், போட்டிக்கு மத்தியில் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். பெண்களுக்கு, தங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. இல்லத்தில் சுபகாரியங்கள் இனிதே நடைபெறும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 21, 22, 27, 29, ஆகஸ்டு: 2, 3, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.

  துலாம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் துலாம் ராசி நேயர்களே!

  ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியையும், சகாய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்தையும் குரு பார்க்கிறார். எனவே தொழில் வளர்ச்சி மேலோங்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வளர்ச்சி கூடும். முக்கியப் பிரமுகர்களை சந்தித்து முன்னேற்றம் அதிகரிக்க வழிவகுத்துக் கொள்வீர்கள். மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதமாகவே இம்மாதம் அமையப் போகிறது.

  மிதுன - புதன்

  ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்குப் புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நன்மைகள் பலவும் நடைபெறும். நம்பிக்கைக்குரிய விதத்தில் நண்பர்கள் நடந்துகொள்வர். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடைபெறும். பயணங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கேட்ட இடத்திற்கும் மாறுதல் உண்டு.

  சிம்ம - செவ்வாய்

  ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - சப்தமாதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதார நிலை உயரும். வெளிநாட்டு வணிகம் ஆதாயம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும். சிம்மத்தில் இருக்கும் செவ்வாயை, குரு பார்ப்பதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

  சிம்ம - சுக்ரன்

  ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுகின்றது. இது நன்மைதான். சகாய ஸ்தானாதிபதியான குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதன் மூலம் பல வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  கடக - புதன்

  ஆனி 19-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது சரிந்து கிடந்த தொழில் சகஜநிலைக்கு வரும். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் வெற்றிபெறும். பணி ஓய்விற்குப் பிறகும் சிலருக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு பழைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் நடத்துபவர்கள் புதிய கூட்டாளிகளை இணைத்துக்கொண்டு லாபம் குவிக்க வழிவகுத்துக்கொள்வர்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புமிக்க பதவிகள் கிடைக்கலாம். வியாபாரம், தொழில் புரிபவர்கள் புதிய ஒப்பந்தங்களால் மகிழ்ச்சி அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். கலைஞர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன்தரும். பெண்களுக்கு ஆரோக்கியம் சீராகும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 23, 24, 30, ஜூலை: 1, 2, 5, 6. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

  துலாம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.5.23 முதல் 15.6.23 வரை

  நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

  வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் மாதத் தொடக்கத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியிலேயே கேதுவும், சப்தம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்து சர்ப்ப தோஷத்தை உருவாக்குகிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பொருளாதார நிலை திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் ஆதரவோடு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

  ராகு-கேது சஞ்சாரம்

  பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகுவும், கேதுவும் மாதத்தொடக்கத்திலேயே சர்ப்ப தோஷ அமைப்பில் இருக்கிறார்கள். கேது ஜென்மத்திலும், ராகு சப்தமத்திலும் இருப்பதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை அமையும். எதிரிகள் பலம் கூடுதலாகத்தான் இருக்கும். வரவு வரும் முன்னதாகவே செலவு காத்திருக்கும். வாய்ப்புகள் வந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாமல் போகலாம். சம்பள உயர்வு காரணமாக குடும்பத்தில் ஓரிருவர் வெளியேறிச் சென்று வேலை பார்க்க நேரிடலாம். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.

  கடக - சுக்ரன்

  வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிக்கு தன- சப்தமாதிபதியான செவ்வாய், உங்கள் ராசிநாதன் சுக்ரனோடு சேரும்பொழுது அற்புதமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் செய்ய நினைத்த காரியத்தை மறுகணமே செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

  ரிஷப - புதன்

  வைகாசி 18-ந் தேதி புதன் ரிஷப ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 12-க்கு அதிபதி 8-ம் இடத்திற்கு வருவது மிக அற்புதமான நேரமாகும். 'விபரீத ராஜயோக' அடிப்படையில் தடைபட்ட பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு திடீர் முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். அதனால் பலனும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டு.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். தலைமைப் பதவிகள் தேடிவரும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு விடிவு காலம் தொடங்கிவிட்டது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். கலைஞர்களுக்கு அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வரலாம். தேக்க நிலை மாறி, பெண்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்படும் நேரம் இது. உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். தம்பதிகளின் ஒற்றுமை பலப்படும். பணிபுரியும் பெண்களுக்கு பாராட்டும், புகழும் கூடும்.

  பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 23, 24, 27, 28, ஜூன்: 3, 4, 8, 9.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

  துலாம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  14.4.2023 முதல் 14.5.2023

  நிதானத்தோடு செயல்படும் துலாம் ராசி நேயர்களே!

  சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். 6-க்கு அதிபதி குரு ஆறிலும், 5-க்கு அதிபதி சனி ஐந்திலும் சஞ்சரிக்கின்றார்கள். லாபாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். தொழிலில் கடன் சுமை படிப்படியாகக் குறையும். கவலையும் தீரும். அர்த்தாஷ்டமச் சனி விலகியதால் அடுக்கடுக்கான நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரப்போகின்றது. வளமான வாழ்வமைய நண்பர்கள் வழிகாட்டுவர். குருவின் பார்வையும் இம்மாதம் உங்கள் ராசியில் பதியப் போவதால் கூடுதல் நன்மை கிடைக்குமென்றே சொல்லலாம்.

  சனியின் சஞ்சாரம்

  மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். சனிக்கு கும்ப ராசி சொந்த வீடாகும். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகின்றது. நினைத்தது நிறைவேறும். நேசம்மிக்க உறவினர்களின் பாசமழையில் நனைவீர்கள். ஆசைப்பட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்க, அடுக்கடுக்காக லாபம் வந்து கொண்டே இருக்கும். உங்கள் யோசனைகள் அனைத்தும் வெற்றிபெறும் நேரம் இது. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நல்ல முடிவிற்கு வரும். 'வாங்கிய சொத்துக்களை வைத்துக்கொள்வதா? இல்லை கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதா?' என்று சிந்திப்பீர்கள். பண நெருக்கடி அகலும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருப்பவர்கள் தனித்து இயங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

  மேஷ - குரு

  சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கும் குரு பகவான், கல்யாண முயற்சியைக் கைகூட வைப்பார். வருமானத்தையும் உயர்த்துவர். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அருள்தரும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசியைக் குரு பார்ப்பதால் மனதைரியமும் அதிகரிக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணப்பிரச்சினை காரணமாக விலகியிருந்த சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோக மாற்றத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடலாம். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெற வழிபாடு கைகொடுக்கும்.

  மிதுன - சுக்ரன்

  சித்திரை 20-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன், 9-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். பாக்கிய ஸ்தானம் பலம்பெறுவதால் சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தேக்கநிலை மாறி தெளிவு பிறக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வதோடு பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு மற்றும் இடம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

  இம்மாதம் குரு பகவான் வழிபாடு குதூகலம் வழங்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 14, 15, 24, 25, 30, மே: 1, 2, 6, 7, 8.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

  துலாம்

  தமிழ் மாத ராசிப்பலன்

  15.3.2023 முதல் 13.4.23 வரை

  எதிலும் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

  பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். எனவே இதுவரை இருந்த தடைகள் அகலும். தேவையற்ற பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். அக்கம், பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கூடும். அனாவசியச் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க வழிசெய்வீர்கள். மனோதிடம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

  இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், அர்த்தாஷ்டமச் சனியைப் பார்க்கிறார். இந்த நிகழ்வு பங்குனி 14-ந் தேதி வரை இருப்பதால் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நிலைப்படுத்திக் கொள்வது நல்லது. எந்தச் செயலையும் நிதானத்துடன் செய்வதன் மூலமே, நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆகாரக் கட்டுப்பாடு களாலும், அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலமும் ஆரோக்கியத்தைச் சீராக்கிக் கொள்ளலாம்.

  மேஷ - புதன்

  பங்குனி 15-ந் தேதி உங்கள் ராசிக்கு 9, 12-க்கு அதிபதியான புதன், சப்தம ஸ்தானத்திற்கு வருகின்றார். அங்கிருந்தபடி விரயாதிபதியான புதன் உங்கள் ராசியைப் பார்ப்பதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். பரம்பரைச் சொத்துக்களில் சிலவற்றை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். புதிய நட்பால் பொருள் இழப்பு ஏற்படும் என்பதால், பழகுபவர்கள் சொல்லும் முடிவை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் கிடைக்காது. அருகில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது.

  ரிஷப - சுக்ரன்

  பங்குனி 24-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், 8-ல் சஞ்சரிக்கும் பொழுது இடையூறுகள் அகலும். 'எப்படி முடியுமோ' என்று நினைத்த காரியம் எளிதில் முடியும். சவாலான வேலைகளைக் கூட, சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி சிறுசிறு தொல்லைகள் வரலாம். ஜீரணத் தொல்லை ஏற்படாமல் சீராக உடலை வைத்துக்கொள்ளுங்கள். இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை இனிமையாகவே அமையும்.

  பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தொண்டர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரம், தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகள் செய்து லாபத்தை பெருக்கிக்கொள்ள எடுத்த முயற்சி கைகூடும். கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு போட்டி, பந்தயங்களில் பங்கேற்று பரிசு பெறும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு உறவினர்களின் உதவி கிடைத்து, உள்ளம் மகிழும் வாய்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் புதிய பாதை அமையும். பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றம் உறுதியாகலாம். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

  இம்மாதம் திருமால் வழிபாடு திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

  பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

  மார்ச்: 17, 18, 29, 30, ஏப்ரல்: 3, 4, 8, 9, 10.

  மகிழ்ச்சி தரும் வண்ணம்: பிரவுன்.

  ×