துலாம் ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் புதனுடன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை வழங்குகிறார். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அவர் வக்ரம் பெற்றிருப்பது யோகம்தான். எனவே உங்கள் ராசி புனிதமடைகிறது. சென்ற மாதத்தில் தாமதப்பட்ட காரியங்கள் இப்பொழுது தடையின்றி நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த முன்னேற்றம் இப்பொழுது வந்துசேரும். ஆரோக்கியத் தொல்லை அகன்று உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
வக்ர குரு
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு, உங்கள் ராசியின் சகோதர ஸ்தானத்திற்கு அதிபதி. மேலும் எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கும் அதிபதி. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். ஜீவனத்திற்கு கவலை இல்லாத சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்கள், குணமடைவர். குருவின் பார்வை பலத்தால் உடன்பிறப்புகளின் திருமணம் அல்லது அவர்களின் வாரிசு திருமணத்தை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக அகலும். இதுவரை பாகப்பிரிவினைக்கு ஒத்து வராத உடன்பிறப்புகள் இப்பொழுது மனம் மாறி ஒத்துழைப்பு தருவர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இப்பொழுது மாற்றப்படுவர். 'இடம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், அதற்கு பண உதவி கிடைக்குமா?' என்று காத்திருந்தவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தொழில் நடத்துபவர்கள் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்வர்.
கும்ப - புதன்
உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். 'ஐந்தும் ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பார்கள். எனவே மிதமிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். துணிந்து சில முடிவுகளை எடுத்து, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். எந்த ஒரு வேலையையும் எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் உங்கள் திறமைகளைப் பார்த்து மேலதிகாரிகள் வியப்பர். பதவி உயர்வு தானாக தேடிவரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப - சுக்ரன்
உங்கள் ராசிநாதன் மற்றும் அஷ்டமாதிபதியான சுக்ரன் 7.2.2026 அன்று பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் விரயம் ஏற்படும். எனவே அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுத்த முயற்சி தடைப்பட்டு வந்திருக்கலாம். அது இப்போது கைகூடும். இடமாறுதல் இனிமை தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரும் மாற்றம் நல்ல மாற்றமாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் ஒப்பந்தங்கள் வந்துகொண்டே இருக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு குடும்பத்தில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே தொழில் தொடங்கும் முயற்சி கைகூடலாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜனவரி: 17, 18, 19, 28, 29, பிப்ரவரி: 3, 4, 10, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.