துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆடி மாத ராசிபலன்

Published On 2025-07-17 07:40 IST   |   Update On 2025-07-17 07:42:00 IST

துலாம் ராசி நேயர்களே!

ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் அஷ்டமத்தில் பலம்பெற்று சஞ்சரிக்கிறார். அதேசமயம் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே பொருளாதார நிலை உயரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருள் தரும் ஆலயங்களுக்கு செல்லும் ஆன்மிகப் பயணம் உண்டு. குரு பார்வையால் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்ரம் பெறுவதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. வாரிசுகளால் வாட்டங்களும், விரயங்களும் ஏற்படும் நேரம் இது.

மிதுன - சுக்ரன்

ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வெளிநாடு செல்வது சம்பந்தமாகவோ அல்லது வெளிமாநிலம் செல்வது சம்பந்தமாகவோ முயற்சி எடுத்திருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கன்னி - செவ்வாய்

ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. தனாதிபதியான செவ்வாய், விரய ஸ்தானத்திற்கு வருவதால் அதிகமான விரயங்கள் ஏற்படும் நேரம் இது. சேமிப்புகள் கரையும். வருமானம் ஒரு மடங்கு வந்தால் விரயம் இருமடங்காகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. 'உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே.. இப்போதைய பணியில் இருந்து விலகி, வேறு வேலைக்குச் செல்லலாமா?' என்று சிந்திப்பீர்கள். கடன் சுமையின் காரணமாக, வாங்கிய சொத்தை விற்க நேரிடும். தடைகளையும், தடுமாற்றத்தையும் சந்திக்கும் நேரம் இது.

கடக - புதன்

ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்தில் சூரியனோடு இணைவது யோகம்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் ஆலோசனையை, உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வர். வீடு மாற்றமும், இடமாற்றமும் வெகுவிரைவில் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு, நல்ல பொறுப்புகள் வந்துசேரும். அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். 'நீண்ட தூரத்தில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ- மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். மன நிம்மதி குறையும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜூலை: 23, 24, 27, 28, ஆகஸ்டு: 3, 4, 5, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News