ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் செயல்படும் துலாம் ராசி நேயர்களே!
மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் இனி படிப்படியாக அகலும். உத்தியோகம், தொழிலில் நீங்கள் செய்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரலாம். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் உருவாகும். இருப்பினும் உற்சாகத்துடன் செயல்பட்டு மற்றவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பிள்ளைகளின் வேலை வாய்ப்புக் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சூரியன் - சனி சேர்க்கை
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு லாபாதிபதியானவர் சூரியன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியோடு சேர்கிறார். அதோடு சூரியன், தன் வீட்டைத் தானே பார்க்கிறார். எனவே பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கலை, இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகத்தால் உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
செவ்வாய் வக்ர நிவர்த்தி
மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பலம்பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராகும். பணம் தொடர்பாக எடுத்த புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.
மனதில் உதித்த நம்பிக்கைகள் எல்லாம் நடைபெறும் நேரம் இது. உத்தியோகத்தில் மாற்றங்கள் வரலாம். மேலதிகாரிகள் உங்கள் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பர். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு உயரும். தனித் தனியாக விலகி பணிபுரிந்த தம்பதியருக்கு, இப்பொழுது ஒரே இடத்தில் பணிபுரியும் வாய்ப்பு கைகூடி வரும்.
மீன - புதன் சஞ்சாரம்
மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். விரயாதிபதி நீச்சம் பெறும் இந்த நேரம் நல்ல நேரம்தான். விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டேயிருக்கும்.
வீடு மாற்றம் மற்றும் இடமாற்றம் திருப்தி தரும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இக்காலத்தில் பெருமாள் - லட்சுமி வழிபாடு நன்மைகளை வழங்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி இடமாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு மேற்படிப்பு பற்றிய சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் அன்பும், பாசமும் பெருகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
பிப்ரவரி: 13, 14, 21, 22, 26, 27, மார்ச்: 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.