துலாம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 பங்குனி மாத ராசிபலன்

Published On 2025-03-12 09:03 IST   |   Update On 2025-03-12 09:04:00 IST

நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்றிருந்தாலும் அவர் வக்ரம் பெற்றிருக்கிறார். எனவே உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் உருவாகும். மருத்துச் செலவுகள் உண்டு. உங்கள் ராசிநாதன் சுக்ரன், சூரியனோடு இணைந்திருப்பதால் விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.

இந்த நேரத்தில் சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. வீடு கட்டுவது, கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, பிள்ளைகளின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்குவதன் மூலம் விரயங்களை சுபவிரயமாக மாற்றிக் கொள்ளலாம்.

மீன - புதன் சஞ்சாரம்

மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியானவர் புதன் என்பதால், அவர் நீச்சம் பெறுவது நன்மைதான். நெருக்கடி நிலை அகலும். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். 9-ம் இடத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால், முன்னோர் சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் தாமதம் ஏற்படும்.

தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனப்பழுதுச் செலவை முன்னிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் சூழ்நிலை அமையும். இடமாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை உறுதியாகலாம். வரும் மாற்றங்கள் திருப்தி அளிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும்.

கும்ப - புதன் சஞ்சாரம்

பங்குனி 4-ந் தேதி புதன், வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 5-ம் இடத்திற்கு வருவதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு தொகையை செலவிடுவீர்கள். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, வெளிநாடு செல்லும் முயற்சிகளுக்கோ உறுதுணையாக இருப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை அகலும். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும்.

மீன - சுக்ரன் வக்ரம்

மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரம் அஷ்டமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், சுபவிரயங்கள் அதிகரிக்கும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பங்குதாரர்களை விலக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த காலத்தில் வாங்கிய கடன் சுமை தீர, இடம், பூமியை விற்க முன்வருவீர்கள். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

கடக - செவ்வாய்

உங்கள் ராசிக்கு 2, 7-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பங்குனி 24-ந் தேதி கடக ராசியில் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை வந்து கொண்டேஇருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மூட்டு வலி, முழங்கால் வலி என்று சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். குடும்பச் சுமை கூடும். உறவினர் பகை உருவாகலாம்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்த லாபம் ஓரளவே கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு போட்டிக்கு மத்தியில் பயணம் தொடரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்றிருப்பது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும் நேரம் இது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 19, 20, 21, 27, 28, ஏப்ரல்: 5, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

Similar News