கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆனி மாத ராசிபலன்

Published On 2025-06-20 15:10 IST   |   Update On 2025-06-20 15:11:00 IST

எதையும் துணிந்து செய்யும் கும்ப ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி ஜென்ம சனியாக சஞ்சரிக்கிறார். வாக்கிய கணித ரீதியாக சனி உங்கள் ராசியில் இன்னும் இருக்கிறார். எனவே ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. குருவின் பார்வையும் சனி மீது பதிகிறது. இருப்பினும் எதையும் நீங்கள் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர் விரயங்கள் ஏற்படும். எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வளர்ச்சியில் குறுக்கீடுகள் ஏற்படும். யோசித்து செயல்பட வேண்டிய மாதமிது.

கடக - புதன்

ஆனி 8-ந் தேதி கடக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வருவது நன்மை தான். ''கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'' என்பதற்கேற்ப எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். எதிர்காலம் சிறப்பாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். உத்தியோகத்தில் இதுவரை நீங்கள் கேட்டும் கிடைக்காத ஊர்மாற்றங்கள் இப்பொழுது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

ரிஷப - சுக்ரன்

ஆனி 15-ந் தேதி ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுக ஸ்தானாதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையை செவ்வனே செய்து முடித்து வெற்றிகாண்பீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய்வழி ஆதரவு கிடைக்கும். இதுவரை மற்ற சகோதரர்கள் மீது காட்டிய பாசத்தை இப்பொழுது உங்களிடம் காட்டுவர். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களுடைய சுறுசுறுப்பான செயல்பாடு மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

செவ்வாய் - சனி பார்வை

மாதம் முழுவதும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் குருவின் பார்வையும் சனி மீது பதிவதால் உங்கள் ராசி புனிதமடைகிறது. எனவே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் வந்துசேரும். கூட்டு முயற்சியிலிருந்து விலகி தனித்து இயங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் நிறைய பாக்கிகள் தேங்கி இருக்கும். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் ஒருசில காரியங்களை செய்து தருவதாக சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் பின்வாங்குவர்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு குறுக்கீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்கு நட்பால் நன்மை கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு நினைத்த இலக்கை அடைய முடியும். பெண்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் நன்மை தரும்.

இம்மாதம் சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷத்தை வழங்கும்.

Similar News