கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 ஆவணி மாத ராசிபலன்

Published On 2025-08-18 08:09 IST   |   Update On 2025-08-18 08:10:00 IST

கும்ப ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பகைக் கிரகமான சூரியன் அவரைப் பார்க்கிறார். மேலும் சனியோடு, ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண்பழிகள் வீடு தேடி வரலாம். பிறருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். அதோடு அஷ்டமத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வாகனத்தாலும் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். குலதெய்வ வழிபாடு நன்மையை வழங்கும்.

கடக - சுக்ரன்

ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் கடகத்திற்கு வரும்போது உத்தியோகத்தில் சில மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். 'புத சுக்ர யோகம்' ஏற்படும் இந்த நேரத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வருமான உயர்விற்கு வழிபிறக்கும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கை கொடுக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முன்வருவர்.

சிம்ம - புதன்

ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் சிம்மத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வழியில் சில விரயங்கள் ஏற்படலாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மாறுதல்கள் வரலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு அது கைகூடும். வீடு மாற்றம் திருப்திகரமாக அமையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கிச் செல்லும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இதுவரை தாமதமான இடமாற்றம் இப்போது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சிம்மத்தில் இருக்கும் சூரியனோடு புதன் சேருவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே அரசியல் உலகில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது கிடைப்பதுடன் இடமாற்றமும் சேர்ந்து வரலாம்.

துலாம் - செவ்வாய்

ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லநேரம் தான். இடம், பூமி வாங்குவது போன்றவற்றில் இருந்த தடை அகலும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்கும். அதன் மூலம் வருகின்ற லாபத்தை தொழிலுக்கான மூலதனமாக்குவீர்கள். நீண்ட நாட்களாக பஞ்சாயத்து செய்தும் முடிவடையாத சொத்துப் பிரச்சினை இப்பொழுது முடிவிற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

சிம்ம - சுக்ரன்

ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திருமணத் தடை அகலும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். பிரபலங்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவி களுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஆகஸ்டு: 17, 18, 28, 29, செப்டம்பர்: 2, 3, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

Similar News