நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கும்ப ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் மன வருத்தம் அதிகரிக்கும். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலாது. பயணங்களால் அலைச்சல் ஏற்படுமே தவிர, ஆதாயம் கிடைக்காது. எதை எந்த நேரம் செய்ய நினைத்தாலும், அதில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். இது போன்ற நேரங்களில் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதி வலுவிழப்பது அவ்வளவு நல்லதல்ல. பிள்ளைகளால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். அஷ்டமாதிபதி வலுவிழப்பதால், தடைப்பட்ட சில காரியங்கள் தானாக நடைபெறும். 'கட்டிடம் கட்டும் பணி பாதியில் நிற்கின்றதே' என்ற கவலை இனி அகலும். மாமன், மைத்துனர் வழியில் உருவான மனக்கசப்பு மாறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறுவீர்கள்.
கும்ப - புதன் சஞ்சாரம்
பங்குனி 4-ந் தேதி புதன், கும்ப ராசிக்கு வக்ர இயக்கத்தில் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியில் வக்ரம் பெறும் பொழுது, நற்பலன்களை வழங்குவார். என்றாலும் பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. எதிரிகளின் பலம் கூடும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். திடீர் திடீரென வரும் மாற்றங்கள், மனக்கலக்கத்தை உருவாக்கும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். அசுர குரு வக்ரம் பெறுவது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும் உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன் என்பதால், வாங்கிய இடத்தை விற்க வேண்டிய சூழல் உருவாகும். வாகனம் வாங்கும் முயற்சியில் தடை ஏற்பட்டு அகலும். குடும்பத்தில் நீண்ட நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பொருளாதார பற்றாக்குறையின் காரணமாக ஒரு சிலர் கைமாற்று வாங்குவார்கள். பயணங்கள் பலன் தரும் வகையில் அமையாது. நல்ல பலன்கள் தேடிவர சுக்ர பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
கடக - செவ்வாய்
பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் செவ்வாய் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மூட்டு வலி, முழங்கால் வலி என்று ஏதேனும் ஒரு குறைபாடு வந்துசேரும். உடன்பிறப்புகளால் சில பிரச்சினைகள் உருவாகும். ஊர் மாற்றம், ஒரு சிலருக்கு வீடு மாற்றம் உறுதியாகலாம். சொந்த கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, வாடகை கட்டிடத்திற்கு மாற்றும் சூழ்நிலை கூட உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்கள் உத்தியோகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவர். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இட மாற்றம் இனிமை தருவதாக அமையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு பெற்றோரின் ஆதரவு பெருமை சேர்க்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்களில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 18, 19, 22, 23, 29, 30, ஏப்ரல்: 3, 4, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.