கும்ப ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி, வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதோடு ஏழரைச் சனியில் இப்போது உங்களுக்கு ஜென்மச் சனி நடைபெறுகிறது. மேலும் இந்த மாதம் சனி பகவான் மீது செவ்வாயின் பார்வையும் பதிகின்றது. எனவே ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். குடும்பச் சுமை அதிகரிக்கும். தொழிலில் நாணயப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இருப்பினும் உங்கள் ராசியில் ராகு இருப்பதால் பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். 6-ல் சூரியன் இருப்பதால் பெற்றோர் வழியில் பிரச்சினைகள் ஏற்படும். அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.
மிதுன - சுக்ரன்
ஆடி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். குறிப்பாக ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். என்னயிருந்தாலும் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் சில காரியங்களில் தடைகளும், தாமதங்களும் வரத்தான் செய்யும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த பாக்கிகள் வசூலாகும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
கன்னி - செவ்வாய்
ஆடி 13-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான அவர், அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லை கூடும். நடக்கும் தொழில் ஸ்தம்பித்து நிற்கலாம். நாணயப் பாதிப்பு ஏற்படும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். இதுபோன்ற நேரங்களில் தசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் துயரங்களில் இருந்து விடுபட இயலும்.
கடக - புதன்
ஆடி 18-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். பஞ்சம - அஷ்டமாதிபதியான அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இடையூறு ஏற்படலாம். அண்ணன் - தம்பிகளுக்குள் அரசல் புரசல்கள் வரலாம். கடன் சுமையின் காரணமாக, ஒரு சிலர் கட்டிய வீட்டை விற்க நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்களை நம்பி செய்த காரியங்களால் இழப்புகள் ஏற்படும். 'பரம்பரை சொத்துக்கள் கைக்கு வரவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திடீர் என பொறுப்புகள் மாற்றப்படும். கேட்ட பொறுப்புகள் கிடைக்காவிட்டாலும், கிடைத்த பொறுப்புகள் நல்லதாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளால் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். கலைஞர்கள் மிகுந்த முயற்சியின் பேரில் சில வாய்ப்புகளைப் பெறுவர். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச் சுமை கூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூலை: 17, 21, 22, 31, ஆகஸ்டு: 1, 6, 7, 3, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.