கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 சித்திரை மாத ராசிபலன்

Published On 2025-04-07 08:39 IST   |   Update On 2025-04-07 08:40:00 IST

எதையும் சமாளிக்கும் வல்லமை பெற்ற கும்ப ராசி நேயர்களே!

விசுவாவசு வருட புத்தாண்டின் சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி ராசி யிலேயே சஞ்சரிக்கிறார். ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2-ல் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து மாதம் தொடங்குவதால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. எந்த செயலையும் நினைத்தவுடன் செய்ய இயலாது. அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருப்பதால், தொழிலில் சில இடையூறு வந்துசேரும். தொகை வருவதிலும் தாமதங்கள் ஏற்படும். எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதம் இது.

குரு - சுக்ர பரிவர்த்தனை

சித்திரை 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை, குரு - சுக்ர பரிவர்த்தனை இருக்கிறது. உங்கள் ராசிக்கு சுகாதி பதியானவர் சுக்ரன். தன - லாபாதிபதியானவர் குரு. இவர்களுடைய பரிவர்த்தனை யோகம் அற்புதமான யோகமாகும். பொருளாதார முன்னேற்றம், புது முயற்சியில் வெற்றி, தொழிலில் கூடுதல் லாபம் போன்றவை ஏற்படும் நேரம் இது. சம்பள உயர்வின் காரணமாக புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கும்ப - ராகு, சிம்ம - கேது

சித்திரை 13-ந் தேதி கும்ப ராசியில் ராகுவும், சிம்ம ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் ராகுவும், 7-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நண்பர்கள் பகையாக மாறுவர். சிறிய காரியத்திற்கு கூட அதிக அலைச்சலும், பிரயாசையும் எடுக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

மனகிலேசமும், உடல் உபாதையும் தீர மருத்துவ ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத இடமாற்றம் மனக்கவலையை அதிகரிக்க வைக்கும். விரயங்களில் இருந்து விடுபடவும், வீண் வாக்கு வாதங்களில் இருந்து அகலவும், தடுமாற்றம் ஏற்படாமல் இருக்கவும் ராகு - கேதுக்களுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

மேஷ - புதன் சஞ்சாரம்

சித்திரை 17-ந் தேதி, மேஷ ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். பஞ்சம - அஷ்டமாதிபதியான புதன், சூரியனோடு சேரும் பொழுது பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவம் நடைபெறும். அவர்களின் கல்யாண முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் இருந்த தடை அகலும். உடன்பிறப்புகளின் வழியே நன்மை ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன யோகம் உண்டு. பயணங்களால் பலன் கிடைக்கும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும்.

மிதுன - குரு சஞ்சாரம்

சித்திரை 28-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அதன் பார்வை பலத்தால் உங்கள் ராசி புனிதமடைகிறது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். இடம், பூமி சேர்க்கை, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பெற்றோர் வழி உறவில் இருந்த விரிசல் அகலும். அவர்களின் ஆதரவோடு தொழில் வளத்தை பெருக்கிக் கொள்வீர்கள். திருமண முயற்சி கைகூடும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிட்டும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஏப்ரல்: 14, 15, 19, 20, 25, 26, மே: 1, 2, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்

Similar News