கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 கார்த்திகை மாத ராசிபலன்

Published On 2025-11-15 10:08 IST   |   Update On 2025-11-15 10:10:00 IST

கும்ப ராசி நேயர்களே!

கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே இனி ஆரோக்கியம் சீராகும். பம்பரமாய் சுழன்று பணிபுரிவீர்கள். மந்த நிலை மாறி மகிழ்ச்சியான நிலை அமையும். இந்த மாதத்தில் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். தொழில் வளர்ச்சி கருதி மாற்றினத்தவர்களைப் பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள முன்வருவீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் யோகம் உண்டு.

குரு வக்ரம்

மாதத் தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அங்ஙனம் தன லாபாதிபதியான குரு பகவான் கார்த்திகை 2-ந் தேதி முதல் வக்ரம் அடைகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன வரவில் தடைகள் ஏற்படும். புதியவர்களை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும். மேலும் உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். இதுபோன்ற நேரங்களில் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவது நல்லது. திசைமாறிய தென்முகக் கடவுளை வழிபட்டு வந்தால் மிகுந்த நன்மையை வழங்கும்.

விருச்சிக - சுக்ரன்

கார்த்திகை 11-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வந்து அங்குள்ள செவ்வாய் மற்றும் சூரியனோடு இணைகிறார். எனவே 'சுக்ர மங்கள யோகம்' உருவாகிறது. பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பெற்றோரின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவை நடைபெறும் சூழல் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு - செவ்வாய்

கார்த்திகை 20-ந் தேதி, தனுசு ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம்தான். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். தள்ளிச் சென்ற ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும். அரசு வழியிலும் சலுகைகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் திருமண விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

விருச்சிக - புதன்

கார்த்திகை 20-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் அங்குள்ள சூரியனோடு இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். உத்தியோக முயற்சி பலன் தரும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தொழிலில் பழைய கூட்டாளிகளை விலக்கி விட்டு, புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள். உறவினர் பகை அகலும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை கரங்களில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாற்றமும், ஏற்றமும் உண்டு. கலைஞர்களுக்கு எண்ணங்கள் ஈடேறும். மாணவ - மாணவிகளுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மாதக் கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

நவம்பர்: 19, 20, 23, 24, 30, டிசம்பர்: 1, 4, 5, 15.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

Similar News