கும்பம் - தமிழ் மாத ஜோதிடம்

2025 மார்கழி மாத ராசிபலன்

Published On 2025-12-14 08:42 IST   |   Update On 2025-12-14 08:43:00 IST

கும்ப ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சனி வலிமை பெற்று சஞ்சரிக்கிறார். எனவே மனக்கிலேசங்கள் அகலும். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு இயங்குவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். புதியவர்கள் பங்குதாரர்களாக வந்திணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்தி கொடுப்பார்கள். சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பான மாதமாகவே அமையும்.

மிதுன - குரு

மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதியப் போகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, இக்காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. அதிலும் 9-ம் பார்வையாக குரு பார்வை பதிவதால் பொன், பொருள் சேர்க்கையும், பொருளாதார முன்னேற்றமும், நண்பர்கள் வழியில் நல்ல வாய்ப்புகளும் வந்துசேரும். குடும்பத்தில் மேலும் சிலர் வருமானம் ஈட்டும் சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

'நீண்ட நாட்களாக வரன்கள் வந்து விட்டுப்போகிறதே.. எப்பொழுதுதான் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும்' என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் இல்லம் தேடி வரப்போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வெளிநாடு செல்வதில் தாமதம் ஏற்பட்டவர்களுக்கு அல்லது வெளிநாட்டிலிருந்து தாய்நாடு செல்ல முடியாமல் தத்தளித்தவர்களுக்கு இப்பொழுது வழிபிறக்கும். உங்கள் எண்ணங்கள் ஈடேறும் விதத்தில் குரு பார்வை கைகொடுக்கப் போகிறது.

தனுசு - சுக்ரன்

மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் முன்னேற்றம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவோடு தொழிலை விரிவுபடுத்திக் கொள்வீர்கள். செய்யும் செயல்பாடுகளில் இருந்த தடைகள் உடைபடும். புதிய பணியாளர்கள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவர்.

மகர - செவ்வாய்

மார்கழி 30-ந் தேதி, மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய் உச்சம் பெறும்போது, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். கணிசமான தொகை கைகளில் புரளும். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்த கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதில் இருந்தபடியே தொழில் செய்யும் சூழல் உருவாகும். கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். மாணவ - மாணவிகள், படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். வளர்ச்சி கூடும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

டிசம்பர்: 16, 17, 20, 21, 27, 28, ஜனவரி: 1, 2, 12, 13.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

Similar News