search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    திருமண யோகம் தரும் தெய்வத் திருமணங்கள்!
    X

    திருமண யோகம் தரும் தெய்வத் திருமணங்கள்!

    • இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
    • சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை

    திருமண யோகம் தரும் தெய்வத் திருமணங்கள்!

    ஆலயங்களில் இறைவழிபாடு தவிர அது தொடர்புடைய எத்தனையோ திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

    பழமையான ஆலயங்களில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு விதமான திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு.

    இந்த திருவிழாக்கள் ஒவ்வொன்றின் பின்னால், பக்தர்களின் வாழ்க்கைக்கு உதவும் பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

    இதனால் தான் ஆலயங்களில் நம் முன்னோர்கள் வகுத்து வைத்தப்படி திருவிழாக்களை நாம் இப்போதும் தொய்வின்றி நடத்தி வருகிறோம்.

    சைவக்கோவில், வைணவக்கோவில், சக்தி ஆலயம் என்று எதுவாக இருந்தாலும் விழாக்கள் நடத்தும் போது பக்தர்களிடம் தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

    மனதைப் பக்குவ நிலைக்கு உயர்த்தியுள்ள பக்தர்கள் ஆலயத் திருவிழாக்களின் போது தாங்கள் ஆன்மா உருக, உருக விழாக்களில் பங்கேற்பார்கள்.

    அத்தகைய விழாக்களில் திருக்கல்யாணத் திருவிழா தனித்துவம் கொண்டது.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் 10 நாட்கள் பெரிய திருவிழாக்கள் நடத்தும்போது திருக்கல்யாண விழா 6ம் திருநாள் அல்லது 7ம் திருநாளாக நடத்தப்படும்.

    சில ஆலயங்களில் தனியாகவும் திருக்கல்யாண விழா நடைபெறுவது உண்டு.

    ஆலய வழிபாடுகளில் ஒவ்வொரு மாதத்துக்கும், ஒவ்வொரு விழாவால் சிறப்பு ஏற்படும். அந்த வகையில் பங்குனி மாதம் உத்திரம் நடசத்திரம் திருநாள் மிகுந்த மகத்துவம் கொண்டது.

    இந்த நாளில் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று எந்தெந்த தெய்வங்களுக்கு திருமணம் நடந்தது தெரியுமா?

    * சிவபெருமான் & பார்வதி திருமணம்

    * ஸ்ரீரங்கமன்னார் & ஆண்டாள் திருமணம்

    * தேவேந்திரன் & இந்திராணி திருமணம்

    * பிரம்மா & சரஸ்வதி திருமணம்

    * ஸ்ரீராமர் & சீதை திருமணம்

    * விநாயகர் & சித்தி, புத்தி திருமணம்

    * முருகன் & வள்ளி திருமணம்

    * நந்தி & சுயம்பிரகாசை திருமணம்

    இப்படி இறை திருமணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

    ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "கல்யாணம்" என்று பெயர். ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "திருக்கல்யாணம்" என்று பெயர்.

    இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும். இதில் போகம் என்பது இன விருத்தியை குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன. இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.

    இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.

    அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.

    நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை. என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.

    அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.

    ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.

    நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.

    ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு தடவை இறைவன், இறைவிக்கு நடத்தப்படும் திருக்கல்யாணம், ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.

    ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.

    சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும். அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் என்றால் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.

    இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள். மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.

    Next Story
    ×