search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா? ஐதராபாத்துடன் நாளை பலப்பரீட்சை
    X

    இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லுமா? ஐதராபாத்துடன் நாளை பலப்பரீட்சை

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நாளை மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந் தேதி தொடங்கியது.

    இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

    கடந்த 20-ந் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. இதன் முதலில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    ‘பிளேஆப்’ சுற்று கடந்த 22-ந் தேதி தொடங்கியது. ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 25 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. இதனால் ராஜஸ்தான் வெறியேறியது.

    ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் ஐதராபாத் அணி 14 ரன்னில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணி வெளியேற்றப்பட்டது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப் போட்டி நாளை (27-ந்தேதி) இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. ‘லீக்‘ போட்டியில் 5 ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. 9 போட்டியில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் ஐதராபாத்தை 3 தடவை வீழ்த்தி இருந்தது. 2 ‘லீக்‘ ஆட்டத்திலும், ‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் சென்னை அணி வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்.

    ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ‘குவாலிபையர்1’ ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றே வெற்றி பெற்றது. டுபெலிசிஸ் மற்றும் பின்வரிசை வீரர்களான தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்கள். இதனால் இறுதிப் போட்டியில் கவனமுடன் விளையாட வேண்டும்.

    மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப்போட்டியில் 4 முறை (2008, 2012, 2013, 2015) தோற்று இருந்தது. இதனால் ஐதராபாத்துக்கு எதிரான நாளைய இறுதிப்போட்டியில் மிகவும் கவனத்துடன் ஆட வேண்டும்.

    பேட்டிங்கில் அம்பதி ராயுடு (585 ரன்), கேப்டன் டோனி (455ரன்), வாட்சன் (438 ரன்), ரெய்னா (413 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் ஜடேஜா, பிராவோ மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் நிகிடி நன்றாக செயல்படுகிறார்.

    மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தால் கோப்பையை வெல்லலாம். நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

    ஐதராபாத் அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் இருக்கிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து 2-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் (688 ரன்), தவான் (471 ரன்), மனீஷ் பாண்டே (286 ரன்), யூசுப்பதான் (215 ரன்), சகிப் அல்-ஹசன் (216 ரன்) ஆகியோரும், பந்து வீச்சில் ரஹீத்கான் (21 விக்கெட்), சித்தார்த் கவுல் (21 விக்கெட்), புவனேஷ்வர் குமார், சந்திப் சர்மா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH
    Next Story
    ×