search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கம்பீர தோற்றம் தரும் கெம்பு நகைகள்
    X

    கம்பீர தோற்றம் தரும் கெம்பு நகைகள்

    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு நகைகள். வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல.
    அடர்த்தியான சிவப்பு நிறத்தில் பார்க்க கம்பீரத்தையும், அழகையும் ஒருங்கே தரும் நகைகள் கெம்பு அல்லது ரூபி பதிக்கப்பட்ட நகைகள். நவரத்தினங்களில் ஒன்றான ரூபி அல்லது கெம்பு கல் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உலோகங்களில் பதிக்கக்கூடியவை. மேலும் இக்கல் வைரம், பச்சைக்கல், முத்து போன்றவற்றுடன் இணைத்து பதிக்கவும் ஏற்றதாகும்.

    கெம்பு கற்கள் பின்க், பர்ப்புள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்றாலும் பொதுவாக கருஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. இது கொரண்டம் (அலுமினியம் ஆக்சைட்) என்ற தாதுவின் ஒரு வகையாகும். இந்த தாதுவில் உள்ள கிரோமியம் என்ற வேதிப்பொருளினால் சிவப்பு நிறம் இந்த கற்களுக்கு கிடைக்கிறது.

    கெம்பு கற்களில் மியான்மார் அல்லது பர்மாவில் கிடைக்கும் கற்களுக்கு விலை அதிகம் இருக்கிறது. பொதுவாக ஒரு கேரட் எடையுள்ள கற்களுக்கு 7 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையில் அதன் நிறம், எடை, அளவு, சுத்தம் மற்றும் கிடைக்கும் இடத்தைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

    வைரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நகைகளில் அணிய விரும்புவது கெம்பு என்றால் மிகையல்ல. மிகவும் மெல்லிய வகை நகைகளை விட சற்று எடை கூடுதலான நகைகளில் கெம்பு அருமையாக இருக்கும். டெம்பிள் ஜூவல்லரி நகைகளிலும், ஜிமிக்கி போன்ற பிரதான நகைகளிலும் பதிக்கப்படும்போது கெம்பு கற்கள் மிக நேர்த்தியாகவும், எடுப்பாகவும் இருக்கும். பொதுவாக பச்சை மற்றும் நீல நிற கற்கள் சிவந்த நிறம் உள்ளவர்களுக்கு அதிக எடுப்பாக இருக்கும். ஆனால் கெம்பு கற்கள் பதிக்கப்பட்ட சிவப்பு நிற கற்கள் கொண்ட நகைகள் மாநிறம் மற்றும் கருத்த நிறம் உள்ள பெண்களுக்கும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

    கெம்பு கற்கள், பச்சை நிற கற்கள், முத்து போன்றவற்றுடன் சேர்த்தும் பதிக்கப்படுகிறது. கெம்பும், முத்தும் பதித்த ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற நகைகள் செட்டாக அணியும்போது மிக நேர்த்தியாகவும், அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தையும் அளிக்கும்.

    இன்று பல நகைக்கடைகளில் மணமகளுக்கு திருமண நகைகளாக முழு கெம்பு செட் நகைகள் கிடைக்கின்றன. கம்மல், தொங்கட்டான் அல்லது ஜிமிக்கி, வளையல், மோதிரம், நெக்லஸ், ஆரம், மாங்காய் மாலை போன்ற மாலைகள், ஒட்டியானம், நெத்திச்சுட்டி, டாலர் என்று ‘ப்ரைடல் ரூபி செட்’ நகைகள் கிடைக்கின்றன. பழமையும், புதுமையும் கலந்து நகைகள் அணிய விரும்பும் இளம் பெண்களுக்கும் பல புதுமையான டிசைன்களில் கெம்பு பதித்த நகைகள் அருமையான தேர்வாக இருக்கும். 
    Next Story
    ×