search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"

    • ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.
    • மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்தவில்லை. மத்தியில் உள்ள ஆளும்கட்சியின் விருப்பத்தின்படியே தேர்தலை நடத்துகிறது. உதாரணத்துக்கு தேர்தல் அறிவிப்புக்கு 2 நாட்களுக்கு முன்புதான் புதிய தேர்தல் ஆணையர்களை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு நியமித்துள்ளது. நேர்மையான, வெளிப்படையான தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும்.

    ஆனால், தேர்தலில் வெற்றிப் பெற மாட்டோம் என்ற பயத்தின் காரணமாக ஆளும் பா.ஜ.க.,வினர், நம் நாட்டை இந்து தேசம் என்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, முஸ்லிம்கள் நாட்டில் ஊடுருவிகள் என்று கூறியுள்ளார்.

    அதுமட்டுமல்ல, நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்பவர்கள் என்றும் இந்துக்களின் வளம் எல்லாம் முஸ்லிம்களுக்கு சென்று விடுகிறது என்றெல்லாம் பேசியுள்ளார்.

    இதுபோல குஜராத் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்திலும் பேசியுள்ளார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்றுள்ளது.

    ஆனால், மோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மென்மை போக்கை கடைபிடிக்கிறது. பா.ஜ.க. தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்புகிறது. எனவே, மோடிக்கு எதிராக நான் கடந்த 1-ந்தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், மதநல்லிணக்கத்துக்கு எதிராக பேசும் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்டு இது போல பேசுவதை தடுக்கவும், தேர்தலை நேர்மையாக நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, கலைமதி ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி கோரிக்கை விடுத்தனர். அப்போது, பிரதமருக்கு எதிரான இந்த வழக்கை, ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மனுவில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யும்படி வக்கீல்களுக்கு உத்தரவிட்டனர்.

    • வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.
    • பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும்

    வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் (ePass) பதிவு செய்து வர வேண்டும்.

    பயணிகள் "epass.tnega.org" என்ற இணைய முகவரியில் விபரங்களை பதிவேற்றம் செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம். இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் (Local ePass ) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451 2900233 என்ற தொலைபேசி எண் 9442255737 என்ற கைபேசி எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.
    • கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    திண்டுக்கல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதில் கோடைகாலத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30.06.2024 வரை இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி கொடைக்கானலுக்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் 'epass.tnega.org' என்ற இணையதளத்தின் மூலம் நேற்று முதல் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், முதல் நாளான நேற்று இரவு 8 மணி வரை 15 ஆயிரத்து 945 வாகனங்கள் வெவ்வேறு தேதிகளில் கொடைக்கானலுக்கு வருவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வாகனங்கள் அனைத்துக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதன்மூலம் 3 லட்சத்து 61 ஆயிரத்து 919 பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தர உள்ளனர். இதில் கொடைக்கானலுக்கு இன்று மட்டும் வருவதற்கு 3 ஆயிரத்து 792 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் 28 ஆயிரத்து 168 சுற்றுலா பயணிகள் வருகை தர இருக்கின்றனர்.

    இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வாகனங்கள் அனைத்தும் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

    • சென்னை ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • மே 1 முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விடுமுறை காலத்தில் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக, ஐகோர்ட் தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சென்னை ஐகோர்ட்டில் மே மாதம் 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, கே.குமரேஷ்பாபு, ஆர்.கலைமதி ஆகியோரும், 15, 16-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.டி.ஆஷா, ஆர்.சக்திவேல், என்.செந்தில்குமார் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சி.சரவணன், பி.பி.பாலாஜி ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விடுமுறை காலத்தில் விசாரிப்பார்கள்.

    இதேபோல ஐகோர்ட் மதுரை கிளையில் மே 8, 9-ம் தேதிகளில் நீதிபதிகள் பி.வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி.தனபால் ஆகியோரும், 15,16-ம் தேதிகளில் பி.வேல்முருகன், பி.வடமலை, கே.ராஜசேகர் ஆகியோரும், 22, 23-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என்.மஞ்சுளா, எஸ்.ஸ்ரீமதி, சி.குமரப்பன் ஆகியோரும், 29, 30-ம் தேதிகளில் நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், எல்.விக்டோரியா கவுரி, ஜி.அருள்முருகன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.

    வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க சென்றபோது, வாக்காளர் பட்டியலில் எனது பெயர் மற்றும் எனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை எனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. அதே முகவரியில் வசிக்கும் எனது மகள் பெயர் பட்டியலில் உள்ளது.

    இதேபோல, எங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15-ந்தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சத்திய பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், "சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

    குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது.

    சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    சென்னை:

    மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சசிகுமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பாராளுமன்ற தேர்தலின் போது, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் முகவர்களும், கூட்டணி கட்சியினரும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். பணப்பட்டுவாடா தொடர்பாக மாணிக்கம் தாகூரின் முகவர்கள் காமராஜ், சீனி, கருப்பையா, பாண்டி ஆகியோருக்கு எதிராக விருதுநகர், மதுரை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும், வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் விதிகளை மீறிய அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய மனுவின் அடிப்படையில் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மனு ஏற்கனவே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    • ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி ‘ஜெய்பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். இங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் 1993-ம் ஆண்டு நெல் அறுவடைப் பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்று வந்த நிலையில், கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதனை கிராமத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளனர்.

    ராஜாகண்ணு என்பவரை கைது செய்த போலீசார் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். காவல்நிலையம் சென்ற ராஜாகண்ணுவின் மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அங்கிருந்து மிரட்டி போலீசார் அனுப்பிய நிலையில், மறுநாள் ராஜாகண்ணு தப்பித்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்த நிலையில் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க முடியாததால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலமும் வழங்க உத்தரவிடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஜாகண்ணு காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பொய் சாட்சி கூறிய மருத்துவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக்கோரி ராஜாகண்ணுவின் உறவினர் தொடர்ந்த வழக்கில், போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1993-ல் கடலூர் கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி 'ஜெய்பீம்' திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை அனுமதி கோரியிருந்தது
    • இந்த யாத்திரை தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது

    கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ராமநவமி யாத்திரை செல்ல ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது.

    தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 11 மாவட்டங்கள் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடையும் இந்த யாத்திரைக்கு சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அனுமதி மறுத்தது.

    தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளரான திலீப் நம்பியார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ராம நவமி யாத்திரைக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? இதனால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்? என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

    இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாகவே இந்த முறை ராம நவமி யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

    இதையடுத்து ராம நவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, அதுகுறித்து 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    • விவிபாட் இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியது.
    • இ.வி.எம் இயந்திர குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தி.மு.க. வழக்கு தொடர்ந்தது.

    சென்னை:

    விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், இ.வி.எம் இயந்திரத்தில் உள்ள சில குறைபாடுகளை சரிசெய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது.

    இதுதொடர்பாக, தி.மு.க. செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது
    • வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும்

    பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தன்னுடைய உயிருக்கும் உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், "தான் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். கல்வி சார்ந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். தன்னுடைய உறவினர் ஒருவரை முத்துசரவணன் என்பவர் படுகொலை செய்தார். இந்த வழக்கில் கடந்த 2023 ம் ஆண்டு முத்துச்சரவணை காவல்துறை என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த என்கவுண்டருக்கு தான்தான் காரணம் என சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பரவியுள்ளன. இதனால், தனக்கு கொலை மிரட்டல் வருவதால், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

    அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில், வெங்கடேஷ் செம்மரக்கடத்தல், துப்பாக்கி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர் என்பதால் இவருக்கு போலீஸ் பாதுகாப்பு முடியாது" என அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் வாதம் முன்வைத்தார்.

    இதனையடுத்து பேசிய நீதிபதி, பாஜக நிர்வாகி வெங்கடேஷ் மீது 59 குற்ற வழக்குகள் இருப்பதுடன் அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது. ஆகவே பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார்.

    வெங்கடேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். குற்றச் செயலில் ஈடுபடும் பலரும் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் சூழல் உருவாகும். அது நீதித்துறையின் மீது நம்பிக்கை இழக்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். 

    • அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
    • இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

    அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அந்த ஆவணங்கள் கிடைத்தபின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வர இருந்தது. ஆனால், நீதிபதி அல்லி இன்று விடுப்பு எடுத்துள்ளார்.

    இதையடுத்து இந்த மனு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

    ×