என் மலர்
செய்திகள்
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.
நவி மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.
கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.
இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- அண்ணன் - தம்பி பொங்கல் கனவு பலிக்கவில்லை
- 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளப் படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 அன்றே வெளியாக இருந்தநிலையில், தணிக்கை பிரச்சனையால் தற்போதுவரை வெளியாகவில்லை. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என மாறிமாறி விசாரணை தொடர்வதால் தற்போது வரை மாற்று ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை.
மறுபுறம் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் சொன்னவாறே ஜன.10 திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிவகார்த்திகேயன், "தொடக்கத்தில் பராசக்தி படத்தை தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடத்தான் திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் படமும் அதே நேரத்தில் வெளியாகும் என்று ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தோம். இதனைத் தொடர்ந்து, ஜன நாயகன் வெளியீட்டை பொங்கல் திருநாளுக்கு மாற்றியிருப்பதாக அறிவிப்பு வெளியானது.
ஜன. 9-ல் ஜன நாயகனை கொண்டாடுங்கள். 33 ஆண்டுகளாக திரைத் துறையில் நம்மை மகிழ்வித்தவரின் கடைசிப் படம். அதற்கு அடுத்த நாளான ஜன.10-ல் பராசக்தியை கொண்டாடுங்கள். இந்தப் பொங்கல் -அண்ணன் தம்பி பொங்கல்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஜன நாயகன் குறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகார்த்திகேயனை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசியுள்ளார். "ஜன நாயகன் வெளிவராதது மிகப்பெரிய வருத்தம். இந்த நேரத்தில் நாமும் சப்போர்ட்டாக இருந்து உதவி செய்திருக்கவேண்டும். மேடையில் அழுதுவிட்டு, எனக்கு அண்ணன்மாதிரி, தம்பிமாதிரி அப்டி இப்டினு அழுவிட்டு, பின்சென்று நடுரோட்டில் விட்டுவிடுவார்கள்." என பேசியுள்ளார்.
முன்னதாக 2019-ல் வெளியான 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்திற்காக பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.4 கோடியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இன்னும் வழங்கவில்லை என்று சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும், அதற்கு ஞானவேல்ராஜா பதில் மனு தாக்கல் செய்ததும், இந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
- பைசன் படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.
இப்படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். இந்நிலையில், சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd தளத்தில் இந்தாண்டிற்கான Top 10 Action / Adventure திரைப்பட தரவரிசைப் பட்டியலில் ஒரே தமிழ் படமாக 'பைசன் காளமாடன்' இடம்பெற்றுள்ளது
இந்த பட்டியலில் 7வது இடத்தை லோகா, 8வது இடத்தை துரந்தர் ஆகிய இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் இடத்தை டீகாப்ரியோ நடிப்பில் வெளியான 'One Battle After Another' படம் முதலிடம் பிடித்துள்ளது.
- 45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
- ஐந்து முறை எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாஜக-வின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா இருந்து வருகிறார். இவரது பதிவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாற்று தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. பீகார் மாநிலத்தில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபி கடந்த ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 19-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்றால், ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். இல்லை என்றால், பாஜக தலைமையகத்தில் தேர்தல் நடைபெறும்.
நிதின் நபி (வயது 45), மறைந்த முன்னாள் பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நபின் கிஷோர் பிரசாத் சின்ஹா மகன் ஆவார். நிதின் நபின், சித்தாந்த ரீதியாக ஆழமான வேரூன்றியவரும், அமைப்புக்கு முழுமையாக அர்ப்பணிப்பு கொண்டவருமான ஒரு ஆற்றல்மிக்க தலைவர் என்று பாஜக கருதுகிறது. மேலும், இவர் ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்.
ஜே.பி. நட்டா 2019-ம் ஆண்டு பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அமித் ஷாவின் தேசிய தலைவர் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், 2020 ஜனவரியில் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
- டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்
- போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்,
ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.
போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
- நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டம்
குத்துச்சண்டையில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்திய வீராங்கனை மேரி கோம். மேரி கோமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஓன்லர் கோம். இந்த தம்பதி கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதனிடையே சமீபத்தில் விவாகரத்து குறித்துப் பேசியிருந்த மேரி கோம், தனது முன்னாள் கணவர் தன்னை பணரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேரி கோமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அவரது முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேரி கோம் 2013-ல் ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடனும், 2017 முதல் வேறொருவருடனும் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மேரி கோமின் கோடிக்கணக்கான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ தான் ஏமாற்றவில்லை என்றும், அவர் சுமத்தியுள்ள நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும் "நான் அவரை மன்னிக்க முடியும், ஆனால் அவர் எனக்குச் செய்ததை என்னால் மறக்க முடியாது" என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ங்களின் நான்கு குழந்தைகளும் தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதாகவும், மேரி கோம் அவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்தினாலும், அவர்களை வளர்த்ததில் தனக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ள மற்ற நாடுகளுக்கு டிரம்ப் கெடுபிடி.
- மீறி வர்த்தகம் செய்தால் 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரிக்கை.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இதற்கிடையே, ஈரானுடன் வர்த்தகம் செய்து கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதில் சீனா பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனா ரஷியா, வெனிசுலா, ஈரானிடம் ஆகிய நாடுகளிடம் இருந்து மலிவான விலைக்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது.
தற்போது வெனிசுலா அதிபரை கைது செய்து, வெனிசுலா எண்ணெய்யை அமெரிக்கா வசம் எடுத்துக் கொள்ள டிரம்ப் முயற்சி செய்கிறார். இந்த நிலையில் ஈரானிடம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதால், சீனாவுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் "வர்த்தக வரிப் போரில் வெற்றியாளர்கள் என்று யாருமில்லை. மேலும் சீனா தனது சொந்த நியாயமான மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் உறுதியாகப் பாதுகாக்கும்" என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் சீனா ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல் என்ற வகையில் எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது.
ஈரானிடம் இருந்து 1.38 பேரல் கொள்முதல் செய்துள்ளது. இது ஈரானின் எண்ணெயில் இருந்து 80 சதவீதம் எனக் கூறப்படுகிறது.
- பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.
- பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்டதும் துப்பாக்கியால் சுடவும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டார். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 2000-த்தை கடந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
பிரதமர் மோடி வருகிற 17-ந்தேதி படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வகை்கிறார். இந்த ரெயில் கவுகாத்தி- கொல்கத்தா இடையே இயக்கப்பட இருக்கிறது.
ஏசி 1, ஏசி 2, ஏசி 3 வகுப்புகளை கொண்ட இந்த ரெயிலில் பயணம் செய்வதற்கான உத்தேச கட்டணத்தை ரெயில்வே அமைச்சர் கடந்த 1-ந்தேதி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்திய ரெயில்வே, டிக்கெட் விலை குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி 1520 ரூபாய், 1240 ரூபாய், 960 ரூபாய் என டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்.ஏ.சி. அல்லது பகுதி அளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் ஆகிய வசதி கிடையாது.
1 கி.மீ. தூரத்தில் இருந்து 400 கி.மீ. தொலைக்கு ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 கி.மீ. தூரத்திற்கு குறைவான இடத்திற்கு பயணம் செய்ய வேண்டுமென்றாலும், முழுத் தொகையை செலுத்த வேண்டும்.
400 கி.மீ. தொலைவிற்குப் பிறகு ஒரு கி.மீ. தூரத்திற்கு 3 ரூபாய் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தற்போதைய அறிவுறுத்தல்களின்படி பெண்கள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீடு, மூத்த குடிமக்கள் ஒதுக்கீடு மற்றும் பணி அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு மட்டுமே இருக்கும். வேறு எந்த இட ஒதுக்கீடும் பொருந்தாது.
- அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
- நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மை டியர் சிஸ்டர். இவர்களுடன் அருண் பாண்டியன் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
அக்கா-தம்பி பாசத்தை மையக்கருவாக கொண்டு படம் உருவாகி உள்ளது. 'என்னங்க சார் உங்க சட்டம்' புகழ் பிரபு ஜெயராம் இப்படத்தை இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
இந்நிலையில் படம் இந்தாண்டு கோடையில் வெளியாகும் என பொங்கலை முன்னிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது
- புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது






