ரூ.30 லட்சம் செலவில் தயாரான சந்திரலேகா || chandralekha film produced
Logo
சென்னை 06-02-2016 (சனிக்கிழமை)
ரூ.30 லட்சம் செலவில் தயாரான சந்திரலேகா
ரூ.30 லட்சம் செலவில் தயாரான சந்திரலேகா

 
60 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பதற்கு ஆகக்கூடிய மொத்த செலவு ரூ.3 லட்சம்தான். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், ஆங்கிலப் படங்களுக்கு இணையாக "சந்திரலேகா"வைத் தயாரிக்கத் திட்டமிட்டார். ரூ.30 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டது.   கதாநாயகன் எம்.கே.ராதா. கதாநாயகனுக்கு இணையான வில்லன் வேடத்துக்கு ரஞ்சன்.
 
கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரிபாய், எல்.நாராயணராவ் ஆகியோர் நடித்தனர். ஜெமினி கதை இலாகாவில் உள்ள கே.ஜே.மகாதேவன், கொத்தமங்கலம் சுப்பு, வேப்பத்தூர் கிட்டு, நயினா ஆகியோர் பல மாதங்கள் இரவு, பகலாக விவாதித்து கதையை உருவாக்கினார்கள்.
 
படத்தில் சர்க்கஸ் காட்சி இடம் பெறவேண்டும் என்று வாசன் கூற, அதற்கு ஏற்ற வகையில் கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜெமினி ஸ்டூடியோ அதிகாரிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப்பயணம் செய்து, படத்தில் நடிக்க ஒரு சர்க்கஸ் குழுவை ஒப்பந்தம் செய்தார்கள். (இந்த சர்க்கஸ் கம்பெனியின் பெயர், பிற்காலத்தில் "ஜெமினி சர்க்கஸ்" என்று மாற்றப்பட்டது) பாடல்களை பாபநாசம் சிவனும், கொத்தமங்கலம் சுப்புவும் எழுத, எஸ்.ராஜேஸ்வரராவ் இசை அமைத்தார்.
 
ஒளிப்பதிவு: கமால்கோஷ். கலை: ஏ.கே.சேகர். எடிட்டிங்: சந்துரு. மங்கம்மா சபதத்தை டைரக்ட் செய்த ஆச்சார்யாதான், "சந்திரலேகா"வை டைரக்ட் செய்வதாக இருந்தது. வாசனுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் அவர் விலகிக்கொள்ள, வாசனே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார். அவர் டைரக்ட் செய்த முதல் படம் இதுதான்.
 
ஜெமினி ஸ்டூடியோவின் சகல பிரிவுகளிலும், சந்திரலேகாவுக்கான வேலைகள் இரவு பகலாக நடந்தன. "சந்திரலேகா" ஓரளவு நவீனம் கலந்த ராஜா, ராணி கதையாதலால், அதற்கான உடைகளைத் தயாரிப்பதில் ஏராளமான தையல் கலைஞர்கள் இரவு பகலாக ஈடுபட்டிருந்தனர். எங்கு பார்த்தாலும், குதிரைகள், யானைகள்! கூண்டுகளுக்குள் புலிகள், சிங்கங்கள்! படத்தின் இறுதியில் இடம் பெறும் பிரமாண்டமான முரசாட்ட காட்சிக்காக, பெரிய பெரிய முரசுகள் தயாரிப்பதில், தச்சு வேலை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
 
படத்தயாரிப்பு செலவுக்காக, தன் சொத்துக்களை எல்லாம் அடமானம் வைத்து, பணம் திரட்டினார், வாசன். இரண்டு மூன்று ஆண்டுகளாகியும், படம் முடிகிற வழியாக இல்லை. மேலும், மேலும் பணத்தை விழுங்கிக்கொண்டே இருந்தது. இதுபற்றி, பிற்காலத்தில் வாசன் குறிப்பிட்டதாவது:_
 
"சந்திரலேகா படத்தைத் தயாரிக்க நான் திட்டமிட்டதற்கு மேலாகப் பணம் செலவாகிக் கொண்டிருந்தது. கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்தபின்னர், ஜெமினி உள்பட என் சொத்து அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டேன். அப்படியும் படம் முடிந்தபாடில்லை. கடனால் ஏற்பட்ட கவலையை விட, அப்பெருந்தொகைக்கு கட்டிய வட்டியை நினைக்கும்போது நான் சற்று தளர்ந்து விட்டேன்.
 
என்னைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமல்ல, மற்றவர்கள் கூட, `இத்துடன் வாசன் போய் விடுவார். இவ்வளவு பெரிய கடனில் இருந்து அவர் மீண்டு வரவே முடியாது' என்று கூறத் தொடங்கினார்கள். இந்தச் செய்தியை "இந்து" அதிபர் சீனிவாச அய்யங்கார் கேள்விப்பட்டு, திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்தார். அவர் இல்லத்துக்குச் சென்றேன். "சந்திரலேகா படத்துக்கான, பெருந்தொகை கடன்பட்டிருப்பதாக கேள்விப்பட்டேன். உண்மைதானா?" என்று கேட்டார்.
 
"உண்மைதான்" என்று கூறினேன். "சந்திரலேகா மூலம் எவ்வளவு வசூலாகும் என்று எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டார். "தமிழ்நாட்டில் மட்டும் அறுபது லட்ச ரூபாய் வசூலாகும். பிறகு இந்தி மார்க்கெட் இருக்கிறது. மொழி மாற்றம் செய்து திரையிட்டால், கோடிக்கணக்கில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினேன். "இவ்வளவு பணம் வசூலாகக்கூடிய படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் நீ, இதற்காக வாங்கியுள்ள கடனை நினைத்துக் கலங்குவதாகக் கேள்விப்பட்டேன். அதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்.
 
"நான் கொடுக்கும் வட்டியை நினைத்து அச்சப்படுகிறேனே தவிர, கடனை நினைத்து அல்ல" என்று பதில் கூறினேன். சில நிமிட இடைவெளிக்குப்பிறகு, "சரி... நீ கடன்பட்டிருக்கும் அந்தப்பெருந்தொகை, வட்டி இல்லாமல் உனக்கு இப்போது கிடைப்பதாக வைத்துக்கொள். நீ நிம்மதியாகப் படத்தை முடிப்பாயா?" என்று கேட்டார். "நிச்சயமாக! நிம்மதியாக மட்டுமல்ல, உற்சாகத்தோடும், உத்வேகத்தோடும் சீக்கிரம் படத்தை முடித்துத் திரையிடுவேன்" என்று பதில் அளித்தேன்.
 
அடுத்தகணமே, நான் சற்றும் எதிர்பாராமல் அய்யங்கார் என் மனதை அரித்துக்கொண்டிருந்த பணப்பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். பேச இயலாமல், நன்றி வெள்ளம் பெருக்கெடுக்க, தெய்வத்தின் முன்னே நிற்கும் பக்தனைப்போல் கூனிக்குறுகி நின்றேன். என் நிலையைப் புரிந்து கொண்ட அய்யங்கார், "நான் இப்போது உனக்கு செய்திருக்கும் உபகாரத்துக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வதாக வாக்களிக்கவேண்டும்" என்றார்.
 
"என்ன செய்யவேண்டும்" என்று பணிவோடு கேட்டேன். "உன்னுடைய படிப்பு, அறிவு, ஆற்றல், துணிவு, உழைப்பு, பொய், புரட்டு இல்லாத புனித வாழ்க்கை, இத்தனையும் கேள்விப்பட்டுத்தான், உனக்கு நான் இந்தப் பண உதவியைச் செய்தேன். உன்னைப்போல் சகல சாமர்த்தியங்களும் ஒருவனுக்கு இருந்து, பணம் ஒன்று இல்லாத காரணத்தால் அவனுடைய அறிவும், ஆற்றலும் பயனற்றதாகி விடும் என்று உனக்குத் தெரிந்தால், இப்போது நான் உனக்குச் செய்த உதவியைப்போல நீ மற்றவர்களுக்குச் செய்யவேண்டும்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். "நிச்சயமாகச் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தேன்."
 
இவ்வாறு வாசன் குறிப்பிட்டார்.
 
("இந்து" சீனிவாச அய்யங்காருக்கு கொடுத்த வாக்குறுதியை, பிற்காலத்தில் நிறைவேற்றினார், வாசன். டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன், "பேசும் தெய்வம்" படம் எடுக்கும்போது, பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, நேரில் அறிமுகம் இல்லாத அவரை வாசன் அழைத்து, ரூ.2 லட்சம் கொடுத்து உதவினார்.
 
"என்னை இப்படி வலிய அழைத்து ஏன் உதவி செய்கிறீர்கள்?" என்று கோபால கிருஷ்ணன் கேட்க, சீனிவாச அய்யங்கார் செய்த உதவியையும், அவருக்கு தான் அளித்த வாக்குறுதியையும் வாசன் வெளியிட்டார்.) "சந்திரலேகா" படம் முடிகிற நேரம். படத்தை முடிக்க இன்னும் பணம் தேவைப்பட்டது. கவலையோடு வீட்டில் உட்கார்ந்திருந்தார், வாசன். அப்போது, அவருடைய தாயார் அங்கே வந்தார்.
 
"என்ன சீனு... முகம் எல்லாம் வாடிப்போயிருக்கிறதே" என்று கேட்டார். "ஒன்றும் இல்லை அம்மா! எல்லா வழியிலேயும் பணம் வாங்கிவிட்டேன். இன்னும் 75 ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் படத்தை முடிக்க முடியும். பணத்துக்கு எங்கே போவது என்றுதான் யோசனை" என்றார், வாசன். "அதுதானா விஷயம்... கொஞ்சம் இரு" என்று உள்ளே போன தாயார், வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் ஒரு தட்டு நிறைய அடுக்கிக்கொண்டு வந்து, "இதை விற்பியோ, அடமானம் வைப்பியோ... படத்தை நல்லபடியா முடிக்கப்பாரு" என்று கூறினார்.
 
"இதெல்லாம் நீயாகவே பாடுபட்டு சேர்த்ததுதானே? உன் உபயோகத்துக்கு இல்லாதது எங்களுக்கு எதுக்கு?" என்று சிரித்தபடி கூறினார், தாயார் வாலாம்பாள் அம்மையார். நகைகளை விற்று படத்தை முடித்தார், வாசன். (பின்னர் தாயாரிடம் இருந்து வாங்கிய நகைகளைப்போல் 2 மடங்கு நகைகளை வாசன் வாங்கி வந்து, தாயாரிடம் கொடுத்து, அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.) 1948_ம் ஆண்டு ஏப்ரல் 9_ந்தேதி "சந்திரலேகா" திரையிடப்பட்டது.
 
அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு புதிய படம் பத்து ஊர்களில்தான் திரையிடப்படும். அங்கு ஓடி முடிந்த பிறகு, அந்த பிலிம் பெட்டி அடுத்த ஊருக்குப்போகும்.   "சந்திரலேகா"வில், எம்.கே.ராதா, ரஞ்சன் அனல் பறக்கும் கத்திச்சண்டை. சந்திரலேகா ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப்படம், மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
 
படத்தின் இறுதியில் எம்.கே.ராதா, ரஞ்சன் கத்திச்சண்டை, ஆங்கிலப்படங்களுக்கு நிகராக விறுவிறுப்பாக இருந்தது. பிரமாண்டமான முரசு ஆட்டம், அனைவரையும் வியப்படைய வைத்தது. "படம் மகத்தான வெற்றி" என்று எல்லா ஊர்களில் இருந்தும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
 
என்றாலும் வாசன் உற்சாகமாக இல்லை. ஏனென்றால், சாதாரணமாக ஒரு படத்துக்கு ஆகும் செலவை விட 10 மடங்குக்கு மேல் செலவாகியிருந்தது. ஆனால் ஒரு படத்துக்கு ஆகும் வசூலைப்போல் 10 மடங்கு வசூலாகும் வாய்ப்பு இல்லை. போட்ட பணம் திரும்புமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.
Banner.gif

மேலும் காலச் சுவடுகள்

    தகவல் இல்லை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif