என் மலர்
தொழில்நுட்பம்

வழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற பிரச்சனை சுமூகமாக ஆப்பிள் நிறுவனம் செலவிட்ட தொகை விவரம் வெளியாகியுள்ளது. #Apple
ஆப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்களிடையே நடைபெற்ற வழக்குகளை இருதரப்பும் திரும்பப் பெற ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு ரூ.34,700 கோடி முதல் ரூ.41,600 கோடி வரை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் ஒரு ஐபோனிற்கு 8 முதல் 9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.550 முதல் ரூ.620) வரை இழப்பீடாக வழங்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருநிறுவனங்களும் வழக்குகளை எதிர்கொண்டிருந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் 5ஜி ஐபோன் வெளியீடு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் உயர் தொகையை செலவிட்டு சட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆப்பிள் மற்றும் குவால்காம் இதுபற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தம் 5ஜி ஐபோன் வெளியீட்டை வேகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நடவடிக்கையின் படி ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு பணம் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தை இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும்.
இருநிறுவனங்களிடையே கையெழுத்தாகி இருக்கும் புதிய ஒப்பந்தத்தின் படி குவால்காம் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை விநியோகம் செய்ய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குவால்காம் நிறுவனத்தின் வியாபாரம், தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேலும் அதிகப்படுத்தும் என குவால்காம் தெரிவித்தது.
2017 ஆம் ஆண்டு முதல் குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே காப்புரிமை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வந்தது.
Next Story






