search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதி்க்கும் பப்புவா நியூகினியா

    தென்மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவைக்கு தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பப்புவா நியூகினியா:

    பப்புவா நியூகினியா அரசு ஃபேஸ்புக் சேவையை ஒரு மாத காலத்துக்கு தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை நிறுத்தும் வகையிலும், அந்நாட்டு மக்களின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து அந்நாட்டு தகவல் தொடர்பு துறை மந்திரி சாம் பசில் கூறும் போது, தடை விதிக்கப்படும் போது தகவல் தொடர்பு துறை மற்றும் பப்புவா நியூகினியா தேசிய ஆய்வு மையம் சார்பில் சமூக வலைத்தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

    ஃபேஸ்புக் தடை செய்யப்படும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் போலி கணக்கு வைத்திருப்போர், ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்வோர், தவறான தகவல்களை பரப்புவோர் கண்டறியப்பட்டு, போலி தகவல்கள் முற்றிலுமாக நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பசில் மேலும் தெரிவித்துள்ளார்.


    கோப்புப்படம்

    இந்த நடவடிக்கை மூலம் உண்மையான கணக்குகளை வைத்திருப்போர் சமூக வலைத்தளத்தை முறையாக பயன்படுத்த வழி செய்யும். பப்புவா நியூகினியாவில் ஃபேஸ்புக் சேவை தடை செய்யப்படுவது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் பப்புவா நியூகினியாவில் சைபர் குற்றத்திற்கென சட்டம் இயற்றப்பட இருக்கிறது.

    “எங்கள் நாட்டில் ஃபேஸ்புக் மூலம் ஏற்படும் தீங்குக்கு இடமளிக்க முடியாது. சைபர் குற்றத்திற்கான சட்டம் குறித்து முறையான பயிற்சி மற்றும் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வரை காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவேன்,” என பசில் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியனில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் மன்னிப்பு கோரினார். மேலும் ஃபேஸ்புக் வழங்கும் அனைத்து சேவைகளிலும் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  

    ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ரகசியமாக திருடி அவற்றை சட்ட விரோதமாக பயன்படுத்திய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன நடவடிக்கை அம்பலமானதைத் தொடர்ந்து பப்புவா நியூகினியாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் தகவல்கள் உளவியல் ஆய்வாளரான அலெக்சான்டர் கோகன் என்பவரால் உருவாக்கப்பட்ட செயலியை கொண்டு சேகரிக்கப்பட்டது.
    Next Story
    ×