என் மலர்
தொழில்நுட்பம்

கோப்பு படம்:: இண்டர்நெட்
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரம் இதுவா?
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் சென்னை பிடித்திருக்கும் இடம் தெரியுமா?
புதுடெல்லி:
இந்தியாவில் அதிவேக 4ஜி டேட்டா வழங்கும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஓபன்சிக்னல் சார்பில் வெளியாகி இருக்கும் சமீபத்திய அறிக்கையில் அதிவேக 4ஜி நெட்வொர்க் வழங்கும் நகரங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.
இந்தியா முழுக்க 20 பெரும் நகரங்களில் 4ஜி டவுன்லோடு வேகங்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் நவி மும்பை அதிவேக 4ஜி எல்டிஇ டவுன்லோடு வேகம் வழங்கியுள்ளது.
நவி மும்பை சராசரியாக நொடிக்கு 8.72 எம்.பி (Mbps) 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கியிருக்கிறது. மும்பைக்கு அடுத்த இடத்தில் சென்னை இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நொடிக்கு 4.4 எம்.பி. (Mbps) வேகத்தில் இருந்து தற்சமயம் நொடிக்கு 8.52 எம்.பி (Mbps) வேகம் வழங்கியுள்ளது.

இவற்றை தொடர்ந்து நொடிக்கு 4 எம்.பி.-க்கும் குறைவான வேகம் வழங்கிய நகரங்களில் அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரின் சராசரி வேகம் நொடிக்கு 3.5 எம்.பி.-யாக உள்ளது. அதிவேக 4ஜி டேட்டா வேகம் வழங்கிய நகரங்களின் டாப் 10 பட்டியலில் ஆறு நகரங்களில் தெற்கு அல்லது மேற்கு பகுதியை சேர்ந்தவையாக உள்ளன.
அதிவேக டேட்டா வழங்கிய இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை, சென்னையை தொடர்ந்து கொல்கத்தா மூன்றாவது இடம் பிடித்து இருக்கிறது. கொல்கத்தாவில் சராசரியாக நொடிக்கு 8.46 எம்.பி. வேகம் வழங்கியுள்ளது. கொல்கத்தாவை தொடர்ந்து பெங்களூரு நொடிக்கு 7.17 எம்.பி. வேகம் வழங்குகிறது. ஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் இந்தியாவின் முன்னணி 20 நகரங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன.
சர்வதேச சந்தையில் எல்டிஇ சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு காரணமாக ஏற்பட்டுள்ள அதிர்வலைகள் காரணமாக மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






