search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு வாழ் இந்தியர்கள்"

    பிரதமர் மோடியின் பிரசார வியூகங்களை பின்பற்றத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். #RahulGandhi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் சென்று ஆதரவு திரட்டினார்.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின மோடி அலை உருவாகவும், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பு ஏற்படுத்தவும் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிகவும் உதவின.

    மோடியின் பிரசார வியூகங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி உள்ள ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். இதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரஸ் கிளை அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பு ஏற்பாடு செய்த திட்டத்தின்படி கடந்த ஆகஸ்டு மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

    5 மாநில தேர்தல் வந்ததால் தனது வெளிநாட்டு கட்சிப் பயணங்களை ஒத்திவைத்து இருந்த ராகுல் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக துபாய், அபுதாபிக்கு ராகுல் செல்ல இருக்கிறார்.

    ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக தென் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று ராகுல் கருதுகிறார். எனவே துபாய், அபுதாபி கூட்டங்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    துபாய் அல்லது அபுதாபியில் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியத்தில் அதிக இந்தியர்களை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆன்லைன் முன்பதிவை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அடுத்த மாதம் அவர் செல்வது 5-வதுகட்ட வெளிநாட்டு பயணமாகும். துபாய், அபுதாபி பயணத்தை முடித்த பிறகு கனடா நாட்டுக்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். #RahulGandhi #Congress

    ×