என் மலர்
நீங்கள் தேடியது "ரெட் லேபிள்"
கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்குகள் என பிரச்சனைகளில் சிக்கியிருந்த நாயகன் லெனின், கல்லூரி முடிந்த பிறகு அந்த வாழ்க்கையை முழுமையாக விட்டு விட்டு, தொழில் மற்றும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனது பழைய கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தல் காரணமாக மீண்டும் கல்லூரிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்.
அடிதடியை தவிர்த்து அமைதியான முறையில் செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் கல்லூரிக்குள் வரும் லெனின், எதிர்பாராத விதமாக கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருப்பதால், இந்த கொலை குற்றம் அவரது எதிர்காலத்தை முற்றிலும் பாதிக்கும் என்பதால், அதிலிருந்து தப்பிக்க தனது காதலியின் உதவியுடன் ஒரு திட்டத்தை உருவாக்குகிறார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்டவரை தேடி போலீசும், அவரது ஆதரவாளர்களும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்கள்.
இறுதியில் லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளம் தெரியாத அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கல்லூரி மாணவர் காலகட்டமும், அதன் பிந்தைய வாழ்க்கையும் என இரண்டு விதமான மனநிலைகளை தோற்றத்திலும் நடிப்பிலும் வேறுபடுத்திக் காட்ட முயன்றிருப்பது திரையில் தெரிகிறது.
நாயகியாக நடித்துள்ள அஸ்மின், தோற்றத்தில் பெரிதாக ஈர்க்காதபோதிலும், அளவான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார். திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது கேரக்டர், இறுதியில் கவனம் ஈர்க்கிறது.
காமெடி கலந்த வில்லத்தனத்துடன் திரையில் தோன்றும் ஆர்.வி.உதயகுமார், தனது நடிப்பால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தங்களுக்கான இடத்தை சரியாகப் பிடித்துள்ளனர்.
கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம் – சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் பொன். பார்த்திபன். குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்து எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர். வினோத், இரண்டாம் பாதியை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக கையாண்டிருக்கிறார்.
ஒரே கல்லூரி வளாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கதைக்கு துணையாக பயணிக்கிறது.
மாலைமலர் ரேட்டிங்: 2.5 / 5
இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட் லேபிள். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்டு இப்படத்திற்கு பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு, கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெட் லேபிள் வரும் 6ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், சென்னை பிரசாத் லேபில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசியதாவது:-
முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்துவிட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பதுபோல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன்.
வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.
நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன். ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன்.
இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம். அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.
இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.
இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம். ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.
- படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ள படம் 'ரெட் லேபிள்'. கதாநாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் நடித்துள்ள இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார், கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடித்துள்ளனர்.
கோவை பின்னணியில் ஒரு கல்லூரியில் நடக்கும் கொலையும் கொலை சார்ந்த சம்பவங்களும் கொண்ட மர்மமான கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இப்படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவை நகரில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 'ரெட் லேபிள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் அல்ல. ஆனால் புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் முதல் முறையாக சிம்ரன் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






